ஹைதராபாத்: ஈநாடு குழும தலைவரும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ் (88) ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈநாடு குழுமம், ப்ரியா ஊறுகாய், மார்கதரிசி சிட் ஃபண்ட்ஸ், ராமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்தாபகர் ராமோஜி ராவ் (88). இவர் பத்திரிகை துறையில் சாதித்தது ஏராளம். இவருக்கு திடீரென கடந்த 5-ம் தேதி சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராமோஜி ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை 4.50 மணிக்கு அவர் உயிர் நீத்தார்.
இந்த தகவல் தெரிந்ததும் பலர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டது.
ராமோஜி ராவ் மறைவு செய்தியை அறிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராமோஜியின் மரணத்தால் திரைத்துறை மற்றும் பத்திரிகை துறை ஒரு சிறந்த மாமனிதரை இழந்துள்ளது. தனது தொலை நோக்கு பார்வையால் அவர் பல வெற்றிகளை சொந்தமாக்கி கொண்டு, தனக்கென தனி முத்திரையை பதித்தார். ஊடகம், திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராமோ ஜியின் மரண வார்த்தை என்னை மிகவும் பாதிக்க வைத்துள்ளது. ஊடகத்துறையில் அவர் புரிந்த சாதனைகள் ஏராளம். அவருடைய சேவைகள் திரைத்துறை மற்றும் பத்திரிகை துறையில் தனி முத்திரையை பதித்துள்ளன. அவர் எப்போதும் நாட்டின் நலன் குறித்தே ஆலோசிப்பார்.
அவருடன் பழகி, பேசும் வாய்ப்பை பெற்ற நான் ஒரு அதிருஷ்டசாலியாக கருதுகிறேன். ராமோஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல் களையும் தெரிவித்துக் கொள் கிறேன்’’ என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ராமோஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ராமோஜி ராவ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமோஜி ராவின் மரண செய்தியை அறிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லியிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் ஹைதராபாத் வந்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் ராமோஜி ராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, மற்றும் தெலங்கானா மாநில அமைச்சர்கள், நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு உட்பட பல திரைத்துரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள் ஆகியோர் நேரில் ராமோஜி ராவுக்கு மலர் மாலை, மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.