தொடரும் கனமழையால் கலங்கும் கேரளம்

By எஸ்.எஸ்.லெனின்

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை நேற்று (அக்.16) உச்சம் தொட்டது. அதிகபட்சமாய் இடுக்கியின் பீர்மேடு பகுதியில் 240 மிமீ மழை பதிவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் மற்றும் தொடர் நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனோர் எண்ணிக்கை 15-ஐ கடந்துள்ளது.

சாலைகள் துண்டிப்பு

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதில் கேரள மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பெய்துவந்த மழை, நேற்று மதியம் தொடங்கி மிக அதிக கனமழையானது. பெருமழை வெள்ளத்துக்கு இடுக்கி, கோட்டயம் மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின.

வெள்ளக்காடான பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கியிருக்கின்றன. கனரக வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. கோட்டம் மாவட்ட கூட்டிக்கல் நிலச்சரிவு மீட்புப் பணிக்காக இந்திய விமானப் படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. 30-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் களத்தில் உள்ளனர். ராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

கோட்டயம், இடுக்கி உட்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் மேலும் 3 மாவட்டங்களுக்கு அடுத்த கட்ட எச்சரிக்கையான ஆரஞ்சும் விடுக்கப்பட்டுள்ளது. மிக கன மழை இன்றும் தொடர்வதோடு அடுத்த ஒரு சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே கனமழையை முன்வைத்து அக்.19 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறப்பும் ஒத்திப்போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE