டெங்கு பாதிப்பில் தேறும் மன்மோகன் சிங்

By எஸ்.எஸ்.லெனின்

உடல்நல பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மத்திய அமைச்சர் மாண்டவியா மீதான மன்மோகன் மகனின் கண்டனத்தை முன்வைத்து இரண்டாவது நாளாக இன்றும் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையிலான சச்சரவு தொடர்ந்தது.

திடீர் காய்ச்சல் மற்றும் அதிகரித்த உடல் சோர்வு காரணமாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன் சிங். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு அவரது உடல்நல பாதிப்பை அறிய மருத்துவர்கள் முயன்றனர். அப்போது மன்மோகன் சிங்கைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று(அக்.15) வருகை தந்தார். ஆனால் அவர் கையோடு புகைப்படக்காரரை அழைத்துச் சென்றதை முன்வைத்து பாஜக - காங்கிரஸார் இடையே காரசார விவாதங்கள் கிளம்பின.

மன்மோகன் சிங்

பாஜக அமைச்சரின் வருகை தொடர்பாக மன்மோகன் சிங்கின் மகன் தமன் சிங் பதிவு செய்த கண்டனத்தில், “நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலிவுற்றிருப்பவரைச் சந்திக்க புகைப்படக்காரருடன் மத்திய அமைச்சர் வந்ததற்கு எனது தாய் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாது அவர்கள் நடந்துகொண்டனர். வயது முதிர்ந்த எனது தந்தை, ’ஜூ’வில் இருக்கும் விலங்கு அல்ல” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து சமூக வெளியில் இரு கட்சியினர் இடையேயும் பற்றிக்கொண்டது. பாஜகவினர் எப்போதும் விளம்பர மோகத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று அதன் எதிர்ப்பாளர்கள் சாடினார்கள். அதற்கு சாட்சியாக பிரதமர் மோடி உட்பட பல்வேறு பாஜக தலைவர்கள், சதா கேமரா கண்களையே வெறிக்கும் படங்களைப் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்தனர்.

இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுவதையொட்டி உத்வேகம் கண்டிருக்கும் காங்கிரஸார், மன்மோகன் சிங் மகன் கண்டனத்தை முன்வைத்து இரண்டாவது நாளாகத் தங்களது எதிர்ப்புக் குரலை முன்னெடுத்தனர். பொதுவெளியில் ஆட்சேபம் அதிகரித்ததுமே அமைச்சர் மாண்டவியா ட்விட்டரில் தான் பதிந்திருந்த மன்மோகன் சந்திப்பு படங்களை நீக்கினார். இதனை தங்களுக்கான வெற்றியாகக் கருதிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடுத்த சுற்று பாஜக சாடலில் மும்முரமாகி உள்ளனர்.

மன்மோகன் சிங்

இதற்கிடையே மன்மோகன் சிங் உடல்நலப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று (அக்.16) தெரிவித்தனர். டெங்கு பாதித்தவர்கள் உடலில் தட்டணு(பிளேட்லெட்) குறைவதால், நோய் எதிர்ப்பு சக்தி சரிவடைந்த பாதிப்புக்கு மன்மோகன் சிங் ஆளாகியிருந்தார். தீவிர சிகிச்சைகளை அடுத்து தட்டணுக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் மன்மோகன் - மாண்டவியா சந்திப்பை முன்வைத்து தொடங்கிய காங்கிரஸ் - பாஜக மோதல் சர்ச்சையின் உச்சமாக அபத்தமான கருத்துக்களும், வதந்திகளும் சமூக ஊடகங்களில் அதிகரித்தன. அப்படியானதன் பாதிப்பில் ஜார்கண்ட் மாநில அமைச்சரான ஹஃபிசுல் ஹசன் என்பவர், மன்மோகன் சிங் காலமாகிவிட்டதாகப் பொதுவெளியில் இரங்கல் தெரிவித்து சங்கடத்தில் சிக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE