பாராமுகம் காட்டும் பாஜக: அம்மா, பிள்ளையின் அடுத்த மூவ் என்ன?

By வெ.சந்திரமோகன்

பாஜக தேசிய செயற்குழுப் பட்டியலில், வருண் காந்தியும் அவரது அன்னை மேனகா காந்தியும் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் வருண், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ட்வீட் செய்ததே, அம்மாவும் பிள்ளையும் புறக்கணிக்கப்பட முக்கியக் காரணம் என்கிறார்கள்.

இந்தச் சூழலில் இருவரும் காங்கிரஸில் இணைவார்களா என்றும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா? அலசுவோம்.

பாஜகவில் இந்திரா குடும்பம்

2004-ல் வாஜ்பாய் காலத்தில் வருணும், மேனகாவும் பாஜகவில் சேர்ந்தனர். சோனியா குடும்பத்தை எதிர்கொள்ள, இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இருவரையும் கட்சியில் சேர்ப்பது தங்களுக்குப் பலம் சேர்க்கும் என்று பாஜக கருதியதன் நீட்சி அது. பொதுவாகவே, மென்மையாகப் பேசக்கூடியவர் என்று அறியப்படும் வருண் காந்தி, பாஜகவில் சேர்ந்த பின்னர் அதிரடியாகப் பேசினார். 2009 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முஸ்லிம்களுக்கு எதிராக அவர் பேசியது கடும் விமர்சனத்தைக் கிளப்பியது. அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போது பீலிபித் தொகுதியில் போட்டியிட்ட அவரை மாற்றிவிட்டு, வேறு வேட்பாளரைத் தேர்வுசெய்யுமாறு தேர்தல் ஆணையம் பாஜகவிடம் கேட்டுக்கொண்டது. எனினும் பாஜக அதை ஏற்கவில்லை. அந்தத் தேர்தலில் 2.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அதேபோல, பாஜகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற இளம் தலைவர் எனும் பெருமையும் வருணுக்குக் கிடைத்தது.

எனினும், மோடி - அமித் ஷா கூட்டணியின் காலத்தில் இருவருக்கும் பாஜகவில் முக்கியத்துவம் குறைந்தது. வருண் காந்திக்கு மோடி அமைச்சரவையில் ஒருமுறைகூட இடமளிக்கப்படவில்லை. சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டப்போதுகூட தனக்கு அதில் இடமளிக்கப்படும் என வருண் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. அதேபோல், மோடியின் முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவிவகித்த மேனகாவுக்கு, அடுத்த முறை அமைச்சர் பதவி கிட்டவில்லை.

தவிர, வருணின் செயல்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே மோடிக்கும் அமித் ஷாவுக்கும் அதிருப்தி இருந்தது. மோடி, அமித் ஷா இருவருடனும் பொது மேடைகளில் வருணை அதிகம் பார்க்க முடிந்ததில்லை. அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட, பாஜக தலைமை வலியுறுத்தியபோதும் அதை நிராகரித்தவர் வருண். 2017 உத்தர பிரதேச தேர்தலின்போது ‘அடுத்த முதல்வர் வருண் காந்திதான்’ என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும், கட்சிக்குள் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி, வருணைக் காங்கிரஸில் சேர அழைத்ததாகவும், முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிறுத்தத் தயாராக இருந்ததாகவும்கூட செய்திகள் பரவின. ஆனால், வருண் அவற்றையெல்லாம் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

இப்படி தொடர்ந்து சலசலப்புகள் எழுந்த சமயத்தில், “மோடியின் பெயரைச் சொல்லித்தான் நாங்கள் வென்றிருக்கிறோம். பாஜகவில் எங்களை மதிப்புடன்தான் நடத்துகின்றனர்” என்று சொன்னார் வருண். “மோடி எனக்குத் தந்தை போன்றவர்” என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். 2011-ல், வருணின் முதல் பெண் குழந்தை ஆத்யா பிரியதர்ஷினி பிறந்து சில நாட்களிலேயே இறந்தது அவரை நிலைகுலையச் செய்தது. அந்த நேரத்தில், மோடி போனில் தன்னை அழைத்து ஆறுதல் சொன்னதாக பதிவுசெய்திருக்கிறார் வருண்.

விவசாயிகளின் மீது கரிசனம்

விவசாயிகள் மீதான வருணின் அக்கறை புதிதல்ல. விவசாயப் பிரச்சினைகள் குறித்து அவர் கட்டுரைகள் எழுதிவருகிறார். கிராமப்புறப் பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய ‘எ ரூரல் மேனிஃபெஸ்டோ: ரியலைஸிங் இந்தியாஸ் ஃபியூச்சர் த்ரூ ஹெர் வில்லேஜ்’ (2018) புத்தகம் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக அலசுகிறது. தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பதை அந்தப் புத்தகத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் அமைப்பை நடத்திவந்த அவர், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க பல கோடி ரூபாய் நிதி திரட்டித் தந்திருக்கிறார்.

எனினும், சமீப காலமாக விவசாயிகளுக்கு ஆதரவு எனும் போர்வையில், மோடி, யோகி அரசுகளுக்குத் தர்மசங்கடம் ஏற்படும் வகையில் அவர் எழுதியும் பேசியும்வருவதாகக் கட்சித் தலைமை கோபமடைந்தது. குறிப்பாக, லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய கோரிய ஒரே பாஜக தலைவர் வருண் மட்டும்தான். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உத்தர பிரதேச முதல்வர் யோகிக்கு அவர் கடிதமும் எழுதியது குறிப்பிடத்தக்கது. காந்தி ஜெயந்தி அன்று, ‘கோட்சே வாழ்க என்று ட்வீட் செய்பவர்கள் தேசத்தை அவமதிப்பவர்கள்’ என்று ட்வீட் செய்தும் பரபரப்பைக் கிளப்பினார் வருண்.

இந்தச் சூழலில், தேசிய செயற்குழுவில் வருணுக்கும் மேனகாவுக்கும் இடம் தராதது குறித்துப் பேசும் பாஜக தலைவர்கள், பழையவர்கள் போனால்தானே புதியவர்களுக்கு இடமளிக்க முடியும் என்று அலட்சியமாகச் சொல்கிறார்கள். மறுபுறம், “கடந்த 5 ஆண்டுகளில் நான் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை. அதில் ஒரு பகுதியாக இருந்ததாக நான் நினைக்கவில்லை" என்று வருண் விளக்கமளித்திருக்கிறார்.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிக்குள் அநாவசிய சலசலப்பு ஏற்பட வேண்டாம் என்று பாஜக தலைமை கருதுகிறது. குறிப்பாக, கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புபவர்களைக் கட்டம் கட்ட பாஜக தலைமை தயங்குவதில்லை. ஆக, வருணுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கடைசி எச்சரிக்கைதான் இந்தப் புறக்கணிப்பு!

கசப்பான கடந்த காலம்

“பாஜகவிலிருந்து விலகும் நிலை வந்தால், அரசியலிலிருந்தே விலகி விடுவேன். காங்கிரஸில் ஒருபோதும் இணைய மாட்டேன்” என்று கூறியவர் வருண். காங்கிரஸில் அவர் சேரப்போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானபோது கோபமடைந்த அவர், அப்படிச் செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தனது அன்னை மேனகாவைத்தான் தனது அரசியல் குருவாகக் கருதுகிறார் வருண். மேனகா ஒருபோதும் காங்கிரஸில் இணையப் போவதில்லை எனும் நிலையில், வருண் மட்டும் தனியாகக் காங்கிரஸில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்த்துவிட முடியாது.

இந்திரா காந்தியின் மருமகளாகத் தனது அன்னை மேனகா அனுபவித்த துயரங்களை, அவர் வாய்மொழியாகக் கேட்டு வளர்ந்தவர் வருண். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் படித்துக்கொண்டிருந்த மேனகாவை ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த சஞ்சய் காந்தி, கண்டதும் காதலில் விழுந்தார். மகனின் காதலுக்கு இந்திரா அரைமனதாகத்தான் சம்மதித்தார். மேனகாவின் குடும்பப் பின்னணி குறித்து இந்திராவுக்குப் பெரிய அபிப்ராயம் இருக்கவில்லை. 1974-ல் திருமணம் நடந்தது. 1975-ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பின்னர், சஞ்சய் காந்தியின் அரசியல் வளர்ச்சி வேகமெடுத்தது.

1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணமடைந்தார். இதையடுத்து, பிரதமர் இந்திராவின் இல்லத்தில் மேனகாவுக்கு சுமூகமான சூழல் அமையவில்லை. ராஜீவ் - சோனியா குடும்பத்துக்குக் கிடைத்த முக்கியத்துவம் தனக்குக் கிடைக்கவில்லை என்று மேனகா அதிருப்தியடைந்தார். குடும்ப ரீதியாக மட்டும் அல்லாமல், அரசியல் ரீதியாகவும் இந்திராவுக்கும் அவருக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டன. சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான அக்பர் அகமதுவுடன் இணைந்து சஞ்சய் விசார் மஞ்ச் எனும் அமைப்பைத் மேனகா தொடங்கியது இந்திராவை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது.

கசப்புணர்வு உச்சமடைந்த நிலையில், இந்திராவின் வீட்டைவிட்டு, தன் இரண்டு வயது மகன் வருணுடன் மேனகா வெளியேற்றப்பட்டார். அத்துடன் இந்திரா காந்தி குடும்பத்துடனான அவரது உறவு முறிந்தது. “ஒரு இந்தியக் குடும்பத்தில் ஒரு விதவைக்கு என்ன நிலை ஏற்படுமோ அதுதான் எனக்கும் ஏற்பட்டது” என்று பிற்பாடு ஒரு பேட்டியில் மேனகா குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பின்னர் 1984 தேர்தலில் ராஜீவ் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டுப் படுதோல்வியடைந்தார் மேனகா. நீண்ட காலத்துக்குப் பின்னர் ஜனதா தளத்தில் இணைந்து வி.பி.சிங் அரசில் அமைச்சரான மேனகா, பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகவே தேர்தல்களில் இருமுறை வென்றார். அதன் பின்னர்தான் பாஜகவின் பார்வை மேனகா, வருண் மீது விழுந்தது.

குடும்ப பந்தம்

தேர்தல் பிரச்சாரங்களில் சோனியாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசத் தயங்காத மேனகா, தனிப்பட்ட ரீதியில் சோனியா குடும்பம் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிடுவார். 1997-ல் பிரியங்கா திருமணம் நடந்தபோது மேனகா அதில் கலந்துகொள்ளவில்லை. வருண் மட்டும் அதில் பங்கேற்றார். எனினும், வருணின் திருமணத்தில் சோனியா குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. மேனகா அதைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தாலும் வருண், சோனியா குடும்பத்தினரை விட்டுக்கொடுக்காமல்தான் பேசினார். வருண் காந்தியின் குழந்தை இறந்த தகவல் அறிந்ததும் ராகுலும் பிரியங்காவும் அவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது ராகுலைப் புகழ்ந்துபேச வருண் தயங்கியதில்லை. மேனகாவே சோனியாவை சில சமயம் புகழ்ந்திருக்கிறார். உண்மையில், சோனியா குடும்பத்தினரைத் தாக்கிப் பேச வருண் மறுத்ததில் மோடி - அமித் ஷா கடும் அதிருப்தி அடைந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

வருண், மேனகா இருவருக்கும் பாஜகவில் இனி சீட் வழங்கப்படாது என்றே தெரிகிறது. இந்தச் சூழலில், எல்லா கசப்புகளையும் தாண்டி, இருவரும் காங்கிரஸில் சேர்வது அக்கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். ஆனால், அது அத்தனை எளிதாக நடந்துவிடாது என்பதே நிதர்சனம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE