நிலக்கரி கையிருப்பு: நிலவரமும் தீர்வுகளும்!

By ஆர்.என்.சர்மா

“நிலக்கரி கையிருப்பு ஒரு நாளுக்குத்தான் வரும், எங்களுக்கு 2 நாள்களுக்குத்தான் இருக்கிறது. 3 நாள் தாக்குப்பிடிக்க முடியும் அதற்கும் மேல் முடியாது” என்று தென்னிந்தியாவில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும் எரிசக்தித் துறைக்கும் அவசரத் தந்திகள் அனுப்பியுள்ளன. டெல்லி மாநகருக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள டாடா நிறுவனம், “இரவில் மின்சாரப் பயன்பாட்டைக் குறையுங்கள், பகலில் ஏர்-கண்டிஷனரை அணைத்து வையுங்கள்” என்று மின் பயனீட்டாளர்களுக்குச் சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. “நிலக்கரியை உடனடியாக விநியோகம் செய்யுங்கள், இல்லாவிட்டால் டெல்லி இருளில் மூழ்கிவிடும்” என்று டெல்லி துணை முதல்வர் சிசோடியா மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மத்திய நிலக்கரி அமைச்சகமோ, “போதிய அளவு நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது, மின்சார வெட்டு வந்துவிடும் என்று வீணாக மக்களை அச்சுறுத்த வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ‘கோல் இந்தியா லிமிட்டெட்’ என்ற அரசு நிறுவனத்திடம், “430 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் 24 நாள் மின்னுற்பத்திக்குப் போதுமானது, இதுபோக நிலக்கரி வெட்டியெடுப்பு தொடங்கிவிட்டது, சரக்கு ரயில்களும் அதிக பெட்டிகள், அதிக நடைகள் மூலம் நிலக்கரியை எடுத்துத் செல்லத் தயாராகிவிட்டன” என்று நிலக்கரித் துறை அறிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், நிலக்கரி கையிருப்பு விஷயத்தில் யார் சொல்வதை நம்புவது, கையிருப்பு இந்த அளவுக்குக் குறையும்வரை மாநில மின்சாரத் துறைகள் என்ன செய்து கொண்டிருந்தன, குறைந்தபட்சம் 2 வார நிலக்கரி கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிர்வாக நடைமுறை அறிவுறுத்தும்போது, மாநில அரசுகள் ஏன் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்தக் குரல்களை எழுப்பவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

காரணம் என்ன?

மின்சாரத்தை வெட்டி எடுப்பது நிலக்கரித் துறை, மாநிலங்களுக்கு வழங்குவது எரிசக்தித் துறை, எடுத்துச் செல்வது ரயில்வே துறை என்று 3 துறைகள் இதில் இணைந்து செயல்படுகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கோவிட் 19 காரணமாக ஆலைகளும் சேவை நிறுவனங்களும் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களும் உற்பத்தி, சேவை, அளிப்பு ஆகியவற்றை அடியோடு நிறுத்தின அல்லது கணிசமாகக் குறைத்திருந்தன. இப்போது நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் உற்பத்தி, பயன்பாடு, நுகர்வு அதிகரித்து வருகிறது.

2 வாரங்களுக்குக் கையிருப்பில் நிலக்கரி இருப்பது அவசியம் என்றாலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் மழைக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவதற்குப் பதிலாக செப்டம்பர் வரையும் நீடித்தது. நிலக்கரியைப் பொறுத்தவரை திறந்தவெளிச் சுரங்கங்களில் மழைக்காலங்களில் வெட்டியெடுக்கவே முடியாது. மூடிய சுரங்கங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்தால் கடுமையான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திவிடும், அத்துடன் வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதும் எளிதல்ல. எனவே, மழைக் காலத்தில் கிட்டத்தட்ட நிலக்கரி அகழ்வு வேலைகள் நிறுத்தப்பட்டன. தேவையும் அதிகம் இல்லாததால் மாநில மின்சார வாரியங்கள் கையிருப்பைக் கொண்டு சமாளிக்கலாம், தேவையென்றால் பக்கத்தில் எங்காவது வாங்கிக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தன. இப்போது தொழில், சேவைத் துறைகள் முழு இயல்பு நிலைக்குத் திரும்பியதாலும் பண்டிகைக் காலமாக இருப்பதால் ஆலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின்சாரத் தேவை அதிகமாகிவிட்டதாலும் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று. இதனால் கையிருப்பு நிலக்கரி வேகமாகக் கரைந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் வெட்டியெடுத்த நிலக்கரி கையிருப்பில் இருந்தாலும், அதை ரயில் வேகன்களில் ஏற்றியனுப்ப முடியாமல் பெருமழை குறுக்கிட்டது.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் தேவைப்படும் அளவு மின்சாரம் கொண்டுசெல்ல தேசிய மின்தொகுப்பு ஏற்பட்டுவிட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றன. இதனால் நிலக்கரிக் கையிருப்பு பற்றி மின்சார வாரியங்கள் அதிகம் கவலைப்படவில்லை என்பதே உண்மை.

விரயமாகும் வரிப்பணம்

வேறு இரு காரணங்களும் உண்டு. அவற்றை மாநில மின்சார வாரியங்கள் வெளியே சொல்வதில்லை. எல்லா மின்சார வாரியங்களும் இப்போது இழப்பைத்தான் அதிகம் ஈட்டுகின்றன. மின்சார வாரிய நிர்வாகத்தில் ஊழல், திறமைக் குறைவு, வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து அதில் தரகு வாங்கிய ருசி, மின்சாரக் கொள்முதலில் தனியார் ஒப்பந்ததாரரிடம் அதிக விலைக்கு வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டு அதில் ஒரு பகுதியைக் கையூட்டாகப் பெறுவது என்று பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் உண்டு. அத்துடன் மின்சாரத்தைக் கம்பி வழியாகக் கொண்டுசெல்வதில் இழப்பு, விநியோகத்தில் இழப்பு, பழுதான – நாள்பட்ட மின்மாற்றிகள், மின்சார வயர்கள், சாதனங்களால் விரயம் என்று பல வழிகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் ஆண்டுதோறும் விரயமாகிறது.

இவையெல்லாமும் மக்களுடைய வரிப்பணம்தான். விவசாயத்துக்கு விலையில்லா மின்சாரம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின்னிணைப்பு என்ற திட்டங்களின் கணக்கில் இந்த இழப்புகளையும் விரயங்களையும் சேர்த்துவிடும் போக்கு அதிகரித்தபடியே இருக்கிறது. மின்சார வாரியங்களின் நிலையை ஆராய்ந்த நிபுணர்கள், அவற்றின் செயல்பாட்டைச் சீராக்க பல சீர்திருத்தப் பரிந்துரைகளைக் கூறினர். மின்சார வாரியத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க சதி, விவசாயத்துக்கும் ஏழைகளுக்கும் இலவச மின்சாரம் தருவதை நிறுத்த முடிவு என்றெல்லாம் இதைக் கண்டித்து குரல்கள் எழுந்தன. அதுதொடர்பான தார்மிக நியாயங்கள் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாவது குறித்து பலரும் பேசத் தயங்குகிறார்கள்.

2 வாரங்களுக்கு மேல் தேவைப்படும் நிலக்கரியை முடைக்காலக் கையிருப்பாக மின்சார வாரியங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எந்தச் சட்டமும், விதிகளும் தடுக்கவில்லை. ஆனால், அப்படி வைத்துக்கொள்வதானால் அதிகம் செலவிட வேண்டும். ஏற்கெனவே, கடனிலும் மானியத்திலும் நிலைமையைச் சமாளிக்கும் மின்சார வாரியங்கள் இப்படிக் கூடுதல் நிதிச்சுமையைத் தாங்க விரும்பவில்லை. அத்துடன் இப்போது தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் அவசரத் தேவைக்கு மின்சாரம் விற்கின்றன.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் தேவைப்படும் அளவு மின்சாரம் கொண்டுசெல்ல தேசிய மின்தொகுப்பு ஏற்பட்டுவிட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றன. இதனால் நிலக்கரிக் கையிருப்பு பற்றி மின்சார வாரியங்கள் அதிகம் கவலைப்படவில்லை என்பதே உண்மை. ஏன் மின்சார வெட்டு அல்லது மின்சாரம் பெறுவதில் இடர்ப்பாடு என்று கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்று நிலக்கரித் தட்டுப்பாடு என்ற கூக்குரல்கள் ஒரே நேரத்தில் எழும்புகின்றன.

மத்திய அரசின் விளக்கமும் நிதர்சனமும்

“கோல் இந்தியா லிமிட்டெட் என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் மட்டும் 430 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது. இது 24 நாட்கள் உற்பத்தி செய்வதற்குப் போதுமானது. மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் சராசரியாக 72 லட்சம் டன்கள் நிலக்கரி இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தி 24 சதவீதம் அதிகமாகியிருக்கிறது. அனல் மின்னுற்பத்தி நிறுவனங்களின் அன்றாட நிலக்கரித் தேவை 18.5 லட்சம் டன்கள். இப்போது 17.5 லட்சம் டன்கள் கிடைக்கிறது. மின்னுற்பத்தி நிறுவனங்கள் அன்றாடத் தயாரிப்புக்குக் கையிருப்பிலிருந்து எடுத்து செலவழித்தவுடன் அதே அளவு நிலக்கரி தினமும் சரக்கு ரயில்களில் வந்தவண்ணம் இருக்கிறது. எனவே பற்றாக்குறை என்று அச்சப்படத் தேவையே இல்லை. மின்னுற்பத்தி குறையும் என்று எச்சரிக்க வேண்டாம்” என்று டெல்லி டாடா பவர் நிறுவனத்தையும் டெல்லி மின் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினையும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் கர்நாடக மாநிலத்தின் 3 பெரிய அனல் மின் நிலையங்கள் கையிருப்பு 48 மணி நேரத்துக்கு (2 நாட்களுக்கு) மட்டுமே போதும் என்பதால், மின்னுற்பத்தியைப் பாதியாகக் குறைத்துக்கொண்டன. மத்திய தொகுப்பிலிருந்து 15 சதவீதம் மின்சாரம் குறைவாகக் கிடைப்பதால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்று கேரள மின்சாரத் துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி கூறியிருக்கிறார். ஆந்திர மாநில அனல் மின் நிலையங்கள் தங்களுடைய தேவையில் 50 சதவீத அளவை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஏ.சி. போடாதீர்கள் என்று மின் துறை அதிகாரியொருவர் ஆந்திர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அனல் மின் நிலையங்களிடம் நிலக்கரி கையிருப்பு போதிய அளவில் இல்லை, உடனே கவனியுங்கள் என்று ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் சில வாரங்களுக்கு முன்னால் வலியுறுத்தியிருந்தார். கர்நாடகத்துக்கென்று ஒதுக்கியிருக்கும் 2 நிலக்கரி வயல்களிலிருந்து விநியோகத்தை விரைவுபடுத்துங்கள் என்று மத்திய அரசுக்குக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சர்வதேச அளவிலான சவால்கள்

நிலக்கரித் துறை இரண்டுவித பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பருவநிலை மாறுதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்போர், “நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் புவி வெப்பத்தையும் அதிகப்படும் செயலை நிறுத்த வேண்டும், அனல் மின் நிலையங்களைப் படிப்படியாக மூட வேண்டும்” என்கின்றனர். இதனால் புதிய அனல் மின் நிலையங்களைத் திறக்க முடியாமல் போவதுடன், இருக்கும் நிலையங்களின் திறனையும் கூட்ட யோசிக்க வேண்டியிருக்கிறது. எனவே இதில் முதலீடு செய்ய தனியார்களுக்கு ஆர்வம் குறைகிறது. அத்துடன் சில ஆண்டுகள் செயல்பாட்டுக்குப் பின்னர் எல்லா அனல் மின் நிலையங்களும் தங்களுடைய முழுக் கொள்ளளவுக்கு உற்பத்தி செய்ய முடியாமல் ஆற்றலை இழக்கின்றன. நிலக்கரி வெட்டியெடுப்பதும் குறைந்துவருகிறது. நிலக்கரி வெட்டியெடுப்பது குறைவதால் தரமுள்ள நிலக்கரியை வெட்டியெடுக்கும் ஆஸ்திரேலியோ போன்ற நாடுகள் விலையைக் கடுமையாக உயர்த்திவிட்டன.

2020-ல் ஒரு டன் நிலக்கரி 50 டாலர்களாக இருந்தது, 2021 அக்டோபரில் 200 டாலர்களாகிவிட்டது. பெருந்தொற்றுக்காலத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், எல்லா நிலக்கரி நிறுவனங்களும் வருவாயை இழந்துவிட்டன. அந்த இழப்பை ஈடுகட்டவும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்சாரத்தை யூனிட்டுக்கு இந்த விலைக்கு விற்போம் என்று ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள், இந்த விலை அதிகரிப்பால் இழப்பைச் சந்திக்க நேரும் என்பதால் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் நிலக்கரி இறக்குமதியை நிறுத்திவைத்துள்ளன. இந்திய நிலக்கரிகளில் சாம்பல் சத்துதான் அதிகம், எரிதிறன் குறைவு என்றாலும் இப்போது அவற்றின் தேவை இதனாலும் அதிகரித்துவிட்டது.

இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம்தான் பூர்த்தியாகிறது. இந்தியாவின் மொத்த நிலக்கரித் தேவையில் 80 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.

இவ்விதம் நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு மாநில மின்சார நிறுவனங்களின் கொள்கை, செயல்பாடு, பருவமழைக்காலம் மேலும் ஒரு மாதம் நீடித்தது, ஒப்பந்ததாரர்கள் இழப்பு அல்லது செலவைத் தவிர்க்க விரும்பி மிகக் குறைந்த நாட்களுக்கே நிலக்கரியைக் கையிருப்பில் வைத்திருக்க நினைத்த உத்தி, பெருந்தொற்றால் நிலக்கரி அகழ்வும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என்று பல காரணங்கள் துணைபுரிகின்றன.

நிலக்கரியின் முக்கியத்துவம்

இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம்தான் பூர்த்தியாகிறது. இந்தியாவின் மொத்த நிலக்கரித் தேவையில் 80 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. புனல் (நீர்) மின்சாரம், அணு மின்சாரம் ஆகியவை அதிக அளவு கைகொடுப்பதில்லை. பல தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்குத் தாங்களே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்கின்றன. இரும்பு, உருக்கு, அலுமினியம், சிமென்ட் தயாரிப்பு ஆலைகள் இதைச் செய்கின்றன, இதனால் தங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை அவை நேரடியாக வாங்குகின்றன. எனவே மின்சார வெட்டு அல்லது நிலக்கரி கையிருப்பு குறைவு ஆகியவை அவற்றைப் பாதிக்கவில்லை.

தீர்வு என்ன?

நிலக்கரியை வெட்டி எடுப்பதில் நவீன உத்திகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்குவதை அதிகப்படுத்த வேண்டும், வீட்டுக்கூரைகளில் மின்சாரம் தயாரிப்பதை, மழை நீர் சேகரிப்பைப் போல நல்ல கட்டமைப்புடன் வீடுகளில் ஏற்படுத்துவதைச் சட்டம் மூலம் கட்டாயமாக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும். விவசாயத்துக்கான பம்பு செட்டுகளை சூரிய ஒளி பம்புசெட்டுகளாக மாற்று மானியம் அதிகப்படுத்தப்பட வேண்டும். இப்படி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் நிலக்கரிக்குத் தட்டுப்பாடு எனும் நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE