ஆன்மிகத் தலைவர் மர்ம மரணம்; முதன்மைச் சீடர் கைது: உபியில் பரபரப்பு

By காமதேனு டீம்

உத்தர பிரதேசத்தில் உள்ள அகில பாரதிய அகாரா ஆன்மிக அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது முதன்மைச் சீடர் ஆனந்த் கிரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் ஆன்மிகத் தலைவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்பட்ட நரேந்திர கிரி, பாகம்பரி உள்ளிட்ட மடங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் மதிப்புக்குரியவர்.

இந்நிலையில், பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் உள்ள தனது அறையில் நேற்று (செப்.20) நரேந்திர கிரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின. சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தர பிரதேச போலீஸார், அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பைக் கைப்பற்றினர். 8 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், தனது மரணத்திற்குக் காரணம் தனது சீடர் ஆனந்த் கிரி என்று அவர் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் ஆனந்த் கிரி கொண்டுவரப்பட்டார். நேற்று மாலை ஹரித்துவாரில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த அவரை உத்தராகண்ட் காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, இரவு 10.30 மணியளவில், உத்தர பிரதேசக் காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர். நரேந்திர கிரியின் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடத்தின் அருகில் உள்ள ஆஞ்சநேய கோயிலின் அர்ச்சகர் ஆத்யா திவாரி, அவரது மகன் சந்தீப் திவாரி ஆகியோரின் பெயர்களும், தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆனந்த் கிரி, பாகம்பரி மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாகவும், அவற்றில் தொடர்புடையவர்களால் மிரட்டப்பட்டதாகவும் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியிருந்தார். நரேந்திர கிரி கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், அதுதொடர்பாக யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

முன்னதாக, நரேந்திர கிரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆனந்த் கிரி, பின்னர் அவரது காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரிய காணொலிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நரேந்திர கிரியின் மறைவுக்கு, பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆன்மிகத் தலைவராகத் திகழ்ந்த நரேந்திர கிரி தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என அவரது பக்தர்கள் கூறியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் உடற்கூராய்வுக்குப் பின்னர் அவரது மரணம் குறித்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE