கேரளாவில் திருமண உடைகளுக்கோர் இலவச வங்கி

By காமதேனு டீம்

உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும், உதவிகளை எப்படி வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு கேரளத்தின் நாசர் (44) நல்லதொரு உதாரணம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மணநாளுக்கான உடைக்கு நிறைய செலவாகுமே, அந்தப் பணத்தை வேறு செலவுகளுக்கு வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கும் பெற்றோருக்கும் மண மகள்களுக்கும் உற்ற துணையாக இருக்கிறார் நாசர்.

கேரளத்தின் மலைப்புறம் (மலையாளிகள் மலை என்பதை மல என்பார்கள்), பாலக்காடு எல்லையில் உள்ள தூத்தா என்ற தொலைதூர கிராமத்தில் பிறந்தவர் நாசர். சவூதி அரேபியாவுக்குச் சென்று நன்கு வேலை செய்து சம்பாதித்த பணத்தைச் சேர்த்துக் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் சொந்த ஊருக்கு வந்தார்.

கொண்டுவந்த பணத்தை தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவழிக்கலாம் என்று எண்ணாமல், அக்கம் பக்கத்தில் சொந்த வீடு இல்லாமல் மழையிலும் குளிரிலும் வாடியவர்களுக்கு எளிமையான வீடுகளைக் கட்டிக் கொள்ள இயன்ற வரையில் உதவினார். அப்போது பல குடும்பத்தினர் அவரிடம் வாஞ்சையோடு பழகினர். திருமணம் நிச்சயமாகிவிட்டால் மணநாளுக்கான ஆடைகளுக்குச் செலவிட முடியாமல் பலர் திணறுவதைப் பார்த்தார். வசதியுள்ளவர்கள் திருமணத்துக்கு அதிகம் செலவழித்து உடைகளைத் தயாரித்துக் கொண்டால் கூட, பிற நாட்களில் அவற்றை அணிய முடியாமல் பீரோவிலேயே வைத்துப் பூட்டி வைப்பதையும் கண்டார்.

எல்லா மதத்தவரும் எல்லா சாதியினரும் எல்லா மொழியினரும் நாசருக்குத் திருமண ஆடைகளை நன்கொடையாக அளிக்கின்றனர்...

எனவே திருமண ஆடைகளைத் தானமாகத் தர விரும்புவோர் தரலாம் என்று அறிவித்துவிட்டு, அதை முதலில் தன்னுடைய வீட்டிலிருந்து தொடங்கினார். அவருடைய மனைவி, சகோதரி, நான்கு குழந்தைகள் என்று அனைவருமே இதை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இது அப்படியே உறவினர்கள், நண்பர்கள் என்று பரவியது. இந்த நல்ல காரியத்துக்கு நல்ல உள்ளங்களின் கொடை குவிந்தது. தன்னுடைய வீட்டிலேயே பெரிய அறையை ஒதுக்கி துணிகளை அழகாகத் துவைத்து, இஸ்திரிபோட்டு மடித்து வைத்தார்.

சொந்த ஊர், பிறகு மலைப்புற மாவட்டம், பாலக்காடு மாவட்டம் என்று எங்கிருந்தெல்லாமோ ஆடைகளைக் கேட்டு பலர் வந்தனர். இலவசமாக இந்த ஆடைகளை, எந்த நிபந்தனையும் விதிக்காமல் தருவார் நாசர்.

அவர்களை அந்த அறைக்கு அழைத்துச் சென்று விரும்பிய ஆடையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு சொல்வார். 3,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரையிலும் மதிப்புள்ள ஆடைகளைக்கூட கருணையுள்ளம் கொண்டவர்கள் தந்துவிடுவர். நாசரும் அவற்றை வாங்கி பராமரிப்பதோடு சரி. யார் எந்த ஆடையைத் தேர்வு செய்தாலும் கேள்வி கேட்காமல் கொடுத்துவிடுவார்.

இப்போது இது சமூக ஊடகங்கள் வழியாகவும் பரவி கர்நாடகத்திலிருந்தும் பலர் வரத் தொடங்கியுள்ளனர். இதில் மகிழ்ச்சி அளிக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால் எல்லா மதத்தவரும் எல்லா சாதியினரும் எல்லா மொழியினரும் நாசருக்கு திருமண ஆடைகளை நன்கொடையாக அளிக்கின்றனர் என்பதுதான்.

எனவே குறிப்பிட்ட ஒரு சமூகத்தவருடையது மட்டுமே கிடைக்கும் என்று ஒதுங்கிவிடாமல் அனைவருமே சென்று பார்க்கலாம். இப்போது தூத்தா கிராமத்திலேயே அனைவரும் எளிதில் வந்து சேருமிடத்தில் வாடகைக்குப் பிடித்து திருமண ஆடைகளைக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆடைகளைப் பெற்று பலன் அடைந்துள்ளன. நாடெங்கும் நாசர்கள் பிறக்க வேண்டும், வளர வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE