பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி; இன்று பதவி ஏற்பு

By காமதேனு டீம்

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் இந்தத் தகவலை நேற்று (செப்.19) மாலை ட்விட்டரில் அறிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து, சுனில் ஜாகர், சுக்ஜிந்தர் ரந்தாவா, பிரதாப் பாஜ்வா போன்றோரின் பெயர்கள் புதிய முதல்வர் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சரண் ஜீத் சிங் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாதான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து, அதை விரும்பவில்லை. இதையடுத்து கட்சித் தலைமை கடைசி நேரத்தில் சரண்ஜீத் சிங் சன்னியைத் தேர்வுசெய்தது.

இந்தத் தகவல் வெளியானதும் சன்னியின் ஆதரவாளர்கள் ராஜ்பவனுக்கு வெளியே உற்சாகமாகக் கொண்டாடினர். முதல்வராகும் வாய்ப்பை இழந்த சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “சரண்ஜீத் சிங் எனக்குத் தம்பியைப் போன்றவர், அவர் முதலமைச்சராவதை வரவேற்கிறேன்” என்று பேட்டி அளித்திருக்கிறார்.

யார் இந்த சரண்ஜீத் சிங் சன்னி?

3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். சம்கவுர் சாஹிப் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 58 வயதாகும் சரண்ஜீத் சிங் சன்னி, சட்டப் படிப்பு படித்தவர். எம்பிஏ பட்டதாரி. அமரீந்தர் சிங் அரசின் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த சரண்ஜீத் சிங் சன்னி, அமரீந்தர் சிங்கை விமர்சித்துவந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஆவார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த சரண்ஜீத் சிங் முதல்வராவது, பஞ்சாபில் வசிக்கும் பட்டியலின சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்பது இதுவே முதல் முறை.

சரண்ஜீத் சிங் சன்னி முதல்வர் ஆவதை வரவேற்றிருக்கும் ராகுல் காந்தி, ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
“பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை நாம் தொடர வேண்டும். அவர்களது நம்பிக்கைதான் தலையாய முக்கியத்துவம் கொண்டது” என்றும் புதிய முதல்வருக்கு ராகுல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“எல்லை தாண்டிய சவால்களிலிருந்து பஞ்சாப் மாநிலத்தை சன்னி பாதுகாப்பாக வைத்திருப்பார் என்று நம்புகிறேன்” என்று கேப்டன் அமரீந்தர் சிங்கும் வாழ்த்தியிருக்கிறார்.

இன்று காலை 11 மணிக்கு, முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார் சரண்ஜீத் சிங் சன்னி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE