புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வென்றது. தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், என்டிஏ பலம் 293 ஆக உள்ளது. என்டிஏ.,வில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுஎன்டிஏ கூட்டணியுடன் இணைந்துதான் தேர்தலை சந்தித்தேன், என்டிஏ கூட்டணியுடன்தான் இருப்பேன் என உறுதிப்பட ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்.
தே.ஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அடிக்கடி அணி மாறுபவர் என்பதால், பாஜக.வுக்கு அவர் அளிக்கும் ஆதரவு குறித்து காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் கேலி செய்தன. இந்நிலையில் என்டிஏ எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில்நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசியதாவது:
நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த எங்களின் ஐக்கிய ஜனதா தள கட்சி முழுஆதரவு அளிக்கிறது. அவர் கடந்த10 ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் பல சேவைகளை ஆற்றியுள்ளார். விடுபட்டதை அவர் இந்தமுறை நிறைவேற்றுவார். அவருக்கு உறுதுணையாக நான் எப்போதும் இருப்பேன்.
எதிர்க்கட்சி அணியில் தற்போதுவெற்றி பெற்றவர்கள், அடுத்த முறை தோல்வியடைவர். எதிர்காலத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்
» என்டிஏ கூட்டம் ஹைலைட்ஸ் முதல் நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்