இந்தி நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!

By காமதேனு டீம்

கோவிட் பெருந்தொற்று காலத்தில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர் இந்தித் திரைப்பட நடிகர் சோனு சூட். அவருடைய நிறுவனங்களின் கணக்குகளில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டு வருமான வரி ஏய்ப்பு நிகழ்வதாகக் கிடைத்த தகவல்களை அடுத்து வருமானவரித் துறையினர் அவரது வீடுகள், அலுவலகம், உறவினர்கள், தொழில் கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்திவருகிறார்கள். டெல்லி, மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், குருகிராம் ஆகிய நகரங்களில் சோதனைகள் நடக்கின்றன.

சோனு சூட் வெறும் நடிகர் மட்டுமல்ல. வீட்டுமனை விற்பனை, அடுக்ககம் கட்டித்தரும் தொழில், அடித்தளக் கட்டமைப்புகளைச் செய்து தரும் தொழில் என்று பலவற்றிலும் முதலீடு செய்திருப்பவர். அவர் கணக்கில் காட்டப்படாத பணத்தை, எந்தவிதப் பிணையும் இல்லாமல் கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனுக்கு காசோலைகளை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நிறுவனங்கள் அனைத்துமே முறையான முகவரிகளில் செயல்படவில்லை என்றும், 20-க்கும் மேற்பட்டோர் அவருடன் பேசி வைத்துக்கொண்டே போலியான முகவரிகளை அளித்து இதில் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வருமான வரி செலுத்தாமல் ஏய்த்த தொகை மட்டும், ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்று இப்போதைக்கு மதிப்பிட்டிருக்கிறார்கள்.

2020 ஜூலை 21-ல், புலம்பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவ அவர் ஓர் அறக்கட்டளையைப் பதிவு செய்தார். அதற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1 வரையில் ரூ.18.94 கோடி நன்கொடை பெற்றிருக்கிறார். இதில் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.1.9 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறார். ரூ.17 கோடி அந்தக் கணக்கில் அப்படியே இருக்கிறது.

அவருடைய நிறுவனம் சார்பு ஒப்பந்தப் பணிகளையும் ஏற்று நடத்தியதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதில் செலவுக் கணக்கை மட்டும் எழுதி ஏராளமான பணத்தை வங்கிகளிலிருந்து எடுத்திருக்கிறார்கள். அந்தத் தொகை மட்டுமே ரூ.65 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நிறைய செலவுகளுக்கு முறையாகக் கணக்கு வைக்காதது, கழிவு இரும்பு உள்ளிட்டவற்றை விற்ற பணத்தைக் கணக்கில் சேர்க்காதது போன்றவையும் தெரியவந்துள்ளன.

அவருடைய அடித்தளக் கட்டமைப்பு நிறுவனம், ஜெய்ப்பூரில் உள்ள இன்னொரு அடித்தளக் கட்டமைப்பு நிறுவனத்துடன் ரூ.175 கோடி மதிப்புக்குக் கொடுக்கல், வாங்கலை நிகழ்த்தியிருக்கிறது. இந்த வணிகத் தொடர்பே சந்தேகப்படும்படியான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. வரி ஏய்ப்பு மட்டும் எவ்வளவு என்று இன்னமும் கணக்கிடுகிறார்கள்.

திடீர் சோதனைகளின்போது, கணக்கில் காட்டப்படாத வகையில் ரூ.1.8 கோடி ரொக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். 11 லாக்கர்கள் மற்றும் இதுவரை அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. விசாரணையும் தணிக்கையும் தொடர்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE