ஓலா மின்சார பேட்டரி ஸ்கூட்டர்கள் டெல்லியில் இரண்டே நாட்களில் ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகிவிட்டன. இதை நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஓலா எஸ்1 ரகம் ரூ.99,000, எஸ்1 புரோ ரூ.1.29 லட்சம் என்ற விலைக்கு விற்கப்படுகின்றன.
ஸ்கூட்டர் வாங்க நினைப்போர் அடையாளத் தொகையாக ரூ.499 செலுத்தினால் போதும், விற்பனை நடைமுறையின்போது ரூ.20,000 தர வேண்டும் என்று நிறுவனம் கூறியிருந்தது. எத்தனை பேர் ஸ்கூட்டர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்று அகர்வால் கூறவில்லை. ஆனால், 2 நாளில் மொத்தம் ரூ.1,100 கோடி மதிப்பு ஸ்கூட்டர்கள் புக் ஆகிவிட்டன என்றார்.
அக்டோபர் மாத மத்திய வாக்கிலிருந்து ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். ஓலா உற்பத்தி நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாகக் கூறிய தலைமை நிர்வாகி வருண் துபே, அனைவருக்கும் ஸ்கூட்டர்கள் கிடைக்கும் வகையில் விரைவில் உற்பத்தி முழு வேகம் பெறும் என்றார்.
பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களைவிட விலை அதிகமாகத் தோன்றினாலும், எரிபொருள் விலை கணிசமாக மிச்சப்படும் என்பதால் இதை வாங்க மக்கள் காத்திருக்கிறார்கள். மின்சார பேட்டரிகளை வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். அத்துடன் பெட்ரோல் பங்குகளைப் போல, மின்சார ரீசார்ஜ் மையங்களும் நிறைய வரவிருக்கின்றன.
காற்றில் பெட்ரோல் மாசு கலப்பதை இது வெகுவாக குறைக்கும். அத்துடன் பெட்ரோல் இறக்குமதிக்காக, அரிய அன்னியச் செலாவணியை அரசு இழப்பது கணிசமாகக் குறையும். இந்தக் காரணங்களால் மின்சார பேட்டரி வாகனங்களின் பயன்பாடும் இனி அதிகமாகும்.