வீட்டுச் சுவர்களை கரும்பலகைகளாக்கிய ஆசிரியர்!

By காமதேனு டீம்

ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் மாணவர்கள் ஒரே வரிசையாக அமர திண்ணை கட்ட வைத்து, ஆங்காங்கே இடைவெளிவிட்டு கரும்பலகைகளைச் செய்துகொடுத்தார். அங்கே மாணவர்கள் எழுதிப் படிக்கின்றனர்.

பெருந்தொற்றுக்கு அஞ்சி பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டாலும், ஏழைக் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடக் கூடாதே என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே ஆசிரியர்கள் பதைபதைக்கின்றனர். அவர்களில் பலர், தங்களால் இயன்ற வழிகளில் மாணவர்களின் கல்வி தொடர வழி செய்து தருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் மேற்கு வர்தமான் மாவட்டத்தில், ஜோபா அட்டப்பாறா என்ற பழங்குடிகள் கிராமத்தில் ஆசிரியர் தீப் நாராயண் நாயக் (34), புதுமையாகச் சிந்தித்து கிராம வீதிகளையே திறந்தவெளி வகுப்பறைகளாக்கிவிட்டார். மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் அவருடைய ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் 4 அல்லது 5 சிறிய கரும்பலகைகளை உருவாக்கிவிட்டார். அதன் மீது வங்கமொழி எழுத்துகளை அகர வரிசைப்படி எழுதி, அதில் எழுத்துகளையும் பதங்களையும் சொற்றொடர்களையும் எழுதப் பயிற்சி அளிக்கிறார்.

கரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால், மாணவர்கள் வீட்டிலேயே அடைந்துவிட்டனர். பலர் தங்களுடைய தாய் தந்தையருடன் வேலைகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். பலர் கால்நடைகளை மேய்த்தனர். பள்ளிக்கூடம் திறக்க நாட்கள் அதிகமானால், மாணவர்கள் எழுத்தையும் எண்ணையும் மறந்துவிட்டால் மீண்டும் படிப்பைத் தொடர முடியாதே என்று தீப்நாராயண் வருத்தப்பட்டார். பள்ளிக்கூடத்தைத் திறக்க அதிகாரிகள் அனுமதி தர மாட்டார்கள் என்பதால், ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் மாணவர்கள் ஒரே வரிசையாக அமர திண்ணை கட்ட வைத்து, ஆங்காங்கே இடைவெளிவிட்டு கரும்பலகைகளைச் செய்துகொடுத்தார். அங்கே மாணவர்கள் எழுதிப் படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு அவர் பாடல்கள், மொழி, இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், கணிதம், உயிரியல் என்று அனைத்துப் பாடங்களையும் நடத்துகிறார். அவருக்கு இதில் சிலர் உதவுகின்றனர். சில நாட்களுக்கு முன்னால் மைக்ராஸ்கோப் களை மாணவர்களிடம் கொடுத்து அதன் மூலம் தாவரங்களையும் பூச்சிகளையும் ஆராய கற்றுக்கொடுத்தார். கரோனா தாக்காமலிருக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பவற்றையும் கற்றுக்கொடுத்தார்.

குழந்தைகள் உற்சாகமாக கற்றுக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் நலன் கருதி பள்ளிக்கூடங்களை மூடச் சொன்ன நிபுணர்கள் இப்போது திறக்குமாறு சொல்கின்றனர். ஓராண்டுக்கும் மேல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால், ஏழைக் குழந்தைகள் படிப்பின் தொடர்ச்சியை இழந்துவிட்டார்கள். எனவே அவர்களுடைய கல்வி தொடர பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 1,400 பள்ளிக்கூட குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களில் 8 சதவீத குழந்தைகள் மட்டுமே இணையவழியில் கல்வியைத் தொடர்வதும், 37 சதவீதத்தினர் படிப்பதே இல்லை என்பதும், மாணவர்களில் பாதிப்பேரால் சில சொற்களைத் தவிர வேறெதையும் படிக்கக் கூட முடியவில்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில்தான் தீப் நாராயண் நாயக்கின் முயற்சி போற்றப்பட வேண்டியதாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE