‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

By காமதேனு டீம்

ஒரேயொருமுறை போட்டுக்கொண்டால் போதும் என்ற வகையில் தயாரிக்கப்பட்டிக்கிறது ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி. இதை கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று இந்திய தலைமை மருந்து நெறியாளர் இன்று (செப். 15) அறிவித்தார்.

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது ‘டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ்’ நிறுவனம். இது ‘ரஷியாவின் நேரடி முதலீட்டு மையம்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஆண்டு இணைந்து ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியை மூன்று கட்டங்களில் சோதித்துப் பார்த்தது. இந்த மருந்து பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது, வீரியம் மிக்கது என்று சான்று அளித்த பிறகு இத்துறையின் நிபுணர் குழுவும் இதற்குச் சான்றளித்துள்ளது. இதை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஊசி மருந்து, அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாப்பாகச் செயல்படுகிறது, நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகமுள்ளது, நோயெதிர்ப்பு சக்தி இதை போட்டுக்கொள்கிறவரின் உடலில் நீண்ட நாளைக்கு நீடிக்கிறது என்பதை நிபுணர்கள் குழுவும் தெரிந்துகொண்டது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஒரே முறையில் நோயெதிர்ப்பை ஊட்டும் முதல் தடுப்பூசி இதுவாகவே இருக்கும். ரஷியாவில் இந்த தடுப்பூசியை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE