ஆர்.என்.ரவியின் பிரிவு உபசார விழாவைப் புறக்கணித்த நாகாலாந்து பத்திரிகையாளர் சங்கம்

By காமதேனு டீம்

தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்றிருக்கும் நிலையில் அவருக்கான பிரிவு உபசார விழாவை, நாகாலாந்தின் பத்திரிகையாளர் சங்கம் புறக்கணித்திருக்கிறது. ஊடகங்களை அவர் தொடர்ந்து புறக்கணித்ததால், இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விளக்கமளித்திருக்கிறது.

2019-ல் நாகாலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். நாகா பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக என்.ஆர்.வி பொறுப்பேற்பார் என செப்டம்பர் 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, நேற்று அவர் நாகாலாந்து ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்றுக்கொண்டார். அம்மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநார் ஜக்தீஷ் முகி கூடுதலாகக் கவனிக்கிறார்.

இந்தச் சூழலில், நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் நேற்று (செப்.14), ஆர்.என்.ரவிக்குப் பிரிவு உபசார விழா நடந்தது. நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ துணை முதல்வர் ஒய்.பாட்டோன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயரதிகாரிகள் உட்பட பலர் அதில் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில், நாகாலாந்து பத்திரிகையாளர் சங்கமான கோஹிமா பிரஸ் கிளப் (கேபிசி) பங்கேற்கவில்லை.

இதுதொடர்பாக, அம்மாநிலத்தில் வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு கேபிசி தலைவர் ஆலிஸ் யோஷு எழுதியிருந்த கடிதத்தில், “என்.ஆர்.ரவி தனது 2 ஆண்டுகாலப் பணியில் பத்திரிகை மற்றும் ஊடகங்களை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டவர்” என்று விமர்சித்திருக்கிறார். அதன் காரணமாகவே, இதற்கு முன்பு நடந்திராத வகையில் ஆளுநரின் பிரிவு உபசார விழாவைப் புறக்கணிக்கும் முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் ஆலிஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநர் என்ற முறையிலும், நாகா பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தர் எனும் முறையிலும் ஒருமுறை கூட அவர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE