பாஜக ஆட்சியில் காளை, எருது, பெண்களுக்கு பாதுகாப்பு!

By காமதேனு டீம்

‘உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில்தான் காளைகள், எருதுகள் நம்முடைய சகோதரிகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்’ என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர்களிடையே, தலைநகர் லக்னோவில் நேற்று (செப்.13) பேசுகையில் இதை அவர் குறிப்பிட்டார்.

“முன்பெல்லாம் ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்க வேண்டியிருந்தால் வீட்டிலிருக்கும் பெண்கள், ‘நீங்கள் வீட்டில் இல்லையென்றால் தொழுவத்தில் இருக்கும் காளைகளுக்கும் மாடுகளுக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் யார் பாதுகாப்பு? என்று அச்சத்துடனேயே கேட்பார்கள். இப்போது யாரும் அப்படிக் கவலைப்படுவதில்லை. மேற்கு உத்தர பிரதேசத்தில் வீதியில் ஒரு மாட்டுவண்டி போனால் வீட்டிலிருக்கும் காளைகளும் மாடுகளும் களவு போய்விடும். இப்போது அந்த நிலை இல்லை. இது கிழக்கு உத்தர பிரதேசத்தில் இல்லை, மேற்கு உத்தர பிரதேசத்துக்கே உரிய தனிப் பிரச்சினை. இப்போது காளைகளையோ, மாடுகளையோ, பெண்களையோ யாராவது பலவந்தமாக எடுத்துச் செல்ல முடியுமா? முன்பிருந்த ஆட்சிகளுக்கும் இப்போதைய ஆட்சிக்கும் இது பெரிய வித்தியாசம் இல்லையா?” என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

மேலும், “உத்தர பிரதேச எல்லை வந்துவிட்டது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று வேடிக்கையாக கேட்டு மாநிலத்தைப் பழிப்பார்கள். ‘சாலையில் குண்டும் குழியுமாக வாகனம் விழுந்து விழுந்து செல்கிறதா, உத்தர பிரதேசம் வந்துவிட்டது என்று தெரிந்துகொள்’ என்பார்கள். ‘இரவில் வீதியில் விளக்கு எரியவில்லையா? அங்குதான் உத்தர பிரதேச எல்லை ஆரம்பம்’ என்பார்கள். ‘நாகரிகமுள்ள எந்த மனிதனும் இரவில் தெருவில் இறங்கி நடக்க அச்சப்படும் மாநிலமே உத்தரப் பிரதேசம்’ என்றுகூட சொல்வார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது அல்லவா” என்றார் யோகி.

சர்ச்சைப் பேச்சு

இதற்கிடையே, நேபாள எல்லையை ஒட்டிய குஷி நகரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யோகி பேசிய வார்த்தைகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

“2017-க்கு முன்னால் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் கொடுத்த கோதுமை, அரிசி, பருப்பையெல்லாம் ‘அப்பா ஜான்’ சாப்பிட்டு ஜீரணம் செய்தார். குஷி நகரத்துக்கு அனுப்பப்படும் ரேஷன் அரிசியும் கோதுமையும் நேபாளத்துக்கும் வங்கதேசத்துக்கும் கடத்தி விற்கப்பட்டுவிடும். இந்த ஆட்சியில் அப்படி ஏழைகளுடைய ரேஷனை யாராவது இடையில் பறிக்க முடிகிறதா?” என்று கேட்டார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியைத்தான் அவர் அப்படி விமர்சித்தார். ‘அப்பா ஜான்’ என்பது முஸ்லிம்களை. முலாயம் கட்சி முஸ்லிம்களுடன் நெருக்கமாக இருந்ததையும் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவங்களை அதில் தொடர்புபடுத்தியும் இப்படிப் பேசியதாகக் கருதப்படுகிறது. அவரது சர்ச்சைப் பேச்சுக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022-ல் நடக்கிவிருக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரக் கூட்டங்களை யோகி ஆதித்யநாத் இப்போதே ஆரம்பித்துவிட்டார். சர்ச்சைப் பேச்சுகள் மூலம் வாக்குகளைத் திரட்டும் உத்தியையும் அவர் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE