ரூ.15,721 கோடி கடன் திரட்ட 11 மாநிலங்களுக்கு அனுமதி

By காமதேனு டீம்

தங்களுக்கென்று அளிக்கப்பட்ட மூலதன செலவு இலக்கை எட்டிய மாநில அரசுகள், வெளிச்சந்தையில் ரூ.15,721 கோடி பொதுக் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆந்திர பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

2021-22 நிதியாண்டின், முதல் காலாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவு இலக்கை இந்த மாநிலங்கள் எட்டிவிட்டன. எனவே, ஊக்குவிப்புத் தொகையாக மேலும் ரூ.15,721 கோடி கடன் திரட்ட அனுமதி தரப்படுகிறது என்று நிதியமைச்சகம் தெரிவிக்கிறது. இந்தக் கடன், மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்டிபி) 0.25சதவீதம் ஆகும்.

அந்தந்த காலாண்டில் நிர்ணயிக்கப்படும் இலக்குப்படி மூலதனச் செலவுகளைச் செய்யும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை மத்திய நிதியமைச்சகத்தின் செலவுகள் துறை நிர்ணயிக்கிறது. மூலதனச் செலவுகளால் உயர் பெருக்கல் விளைவுகள் ஏற்படுகின்றன. பொருளாதாரத்தின் எதிர்கால உற்பத்தித் திறன் கூடுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் அதிகமாகிறது. மூலதனச் செலவு என்பது தொழில் வளர்ச்சி, அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கான செலவு மற்றும் அதிக வருவாயை உடனடியாக ஈட்டித்தரவல்ல முதலீடுகள் போன்றவையாகும்.

2021-22 நிதியாண்டுக்கான மூலதனச் செலவு இலக்கில் பற்றாக்குறை ஏற்பட்டால், 2022-23 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்படவுள்ள அதிகபட்ச கடன் உச்சவரம்பில் ஈடுகட்டப்படும் என்றும் நிதியமைச்சகம் கூறியிருக்கிறது. எனவே இப்போது பெற முடியாத மாநிலங்கள் அடுத்த நிதியாண்டில் அதைப் பெற்றுவிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE