வீட்டைக் காக்கும் அலிகர் இனி நாட்டையும் காக்கும்!

By காமதேனு டீம்

உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரில், ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரிலான பாதுகாப்புக் கல்வி பல்கலைக்கழகத்துக்கு இன்று (செப்.14) அடிக்கல் நாட்டிய மோடி, பாதுகாப்பு தொழில் வழித்தடத்தையும் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “மக்களின் வீடுகளைக் காக்கும் அலிகர் (பூட்டுகள்), இனி நாட்டையும் காக்கும்” என்று குறிப்பிட்டார்.

“இன்று (செவ்வாய்க்கிழமை) ராதாஷ்டமி, புனிதமான நாள். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றிகளைத் தரும். ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகளைத் தயாரிப்பதில் தன்னிறைவு அடைவதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக வளரும். ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்தில் ராணுவம் பற்றிய பாடங்கள் சொல்லித்தரப்படும். ராணுவம் தொடர்பான உயர் ஆராய்ச்சிகளும் நடைபெறும். ராணுவத்தில் இனி பயன்படுத்தவிருக்கும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்தும் கற்றுத்தரப்படும்” என்று மோடி குறிப்பிட்டார்.

அலிகர், ஆக்ரா, கான்பூர், சித்ரகூடம், ஜான்சி, லக்னோ ஆகிய நகரங்களையொட்டிய பகுதிகள் ராணுவம் தொடர்பான தயாரிப்புகளுக்கான தொழிற்பேட்டைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ராணுவத்துக்குத் தேவையான லாரிகள், ஜீப்புகள், துப்பாக்கிகள், ராணுவ வீரர்களுக்கான கவச உடைகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை பெருமளவில் இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. கப்பல்கள், விமானப் படைக்குத் தேவைப்படும் சரக்கு விமானங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், கப்பல் படைக்குத் தேவைப்படும் போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிகள், ரோந்துக் கப்பல்கள் ஆகியவையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அலிகரில் உருவாகும் ராணுவத்துக்கான உற்பத்தி தொழிற்பேட்டையும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகமும் மேற்கு உத்தர பிரதேசத்தையே பெருமளவுக்கு மாற்றமடையச் செய்துவிடும் என்று மோடி கூறியிருக்கிறார்.

“ராஜா மகேந்திர பிரதாப் சிங் தொலைநோக்குப் பார்வை உள்ளவர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி” என்று புகழஞ்சலி செலுத்தினார் மோடி.

இதனிடையே, ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஜாட் சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் போராட்டம் நடத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் ஜாட் சமூகத்தினர் என்பதும் கவனிக்கத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE