குஜராத்தின் பாடிதார் முதல்வர்கள்: ஒரு பார்வை

By காமதேனு டீம்

குஜராத்தின் 17-வது முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் பூபேந்திர படேல், பாடிதார் சமூகத்தைச் சேர்ந்த 5-வது முதல்வர் ஆவார். குஜராத் அரசியலில் பாடிதார் சமூகத்தினருக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. 3-ல் ஒரு பங்கு எம்எல்ஏ-க்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். சுதந்திர இந்தியாவில் பதினான்கரை வருடங்கள், பாடிதார் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்களின் ஆளுகையின்கீழ் குஜராத் இருந்திருக்கிறது என்பது அந்தச் சமூகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இதுவரை குஜராத் முதல்வர் பதவி வகித்த பாடிதார் சமூகத் தலைவர்கள்:

சிமன்பாய் படேல்

1. சிமன்பாய் படேல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிமன்பாய் படேல், 1973-ல் முதன்முறையாக முதல்வரானார். எனினும், 204 நாட்கள்தான் அப்பதவியில் அவர் தொடர முடிந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ‘நவநிர்மாண் இயக்கம்’ நடத்திய போராட்டங்களின் விளைவாக, அவர் பதவிவிலக நேர்ந்தது. பின்னர் 1990-ல் மீண்டும் முதல்வரானார். 1994-ல் மறையும் வரை அந்தப் பதவியில் நீடித்தார். குஜராத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிகோலியவர் எனும் பெருமை சிமன்பாய் படேலுக்கு உண்டு.

1977-ல், முதல்வராகப் பதவியேற்கும் பாபுபாய் படேல்

2. பாபுபாய் ஜாஷ்பாய் படேல்:

சட்டம் பயின்றவரான பாபுபாய், சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். 1975-ல் ஜனதா மோர்ச்சா சார்பில் முதல்வரானவர். குஜராத் மாநிலத்தின், காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் எனும் பெருமை கொண்டவர். இவரும் சில நாட்களே முதல்வராக நீடிக்க முடிந்தது. இவர் பதவியேற்று சில நாட்களிலேயே நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. எனினும், 1976 வரை முதல்வர் பதவியில் நீடித்தார். அதன் பின்னர், இவரது ஆட்சியைக் காங்கிரஸ் அரசு கவிழ்த்தது. பின்னர் 1977 முதல் 1980 வரை ஜனதா கட்சியின் சார்பில் முதல்வராகப் பதவிவகித்தார்.

வாஜ்பாயுடன் கேஷுபாய் படேல்

3. கேஷுபாய் படேல்

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஜனசங்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். குஜராத்தில் பாஜகவை நிலைபெறச் செய்த முக்கியத் தலைவர். 1995-ல் குஜராத்தின் முதல் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்ற பெருமைக்குரியவர். அரசியல் குழப்பங்கள் காரணமாக 221நாட்களில் முதல்வர் பதவியை இழந்த இவர், மீண்டும் 1998-ல் முதல்வரானார். 2001-ல் இவருக்குப் பதிலாக குஜராத் முதல்வராக பாஜக தலைமை தேர்ந்தெடுத்தது இன்றைய பிரதமரான நரேந்திர மோடியை!

ஒருகட்டத்தில், பாஜக ஆட்சியில் பாடிதார் சமூகத்தினர் வஞ்சிக்கப்படுவதாகக் கூறி அச்சமூகத்தினரைத் திரட்டிப் போராடியவர். குஜராத் பரிவர்த்தன் கட்சி (ஜிபிபி) எனும் பெயரில் கட்சி தொடங்கி, 2012-ல் பாஜகவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். அந்தத் தேர்தலில் கேஷுபாய் உட்பட இரண்டே இரண்டு பேர்தான் ஜிபிபி சார்பில் வென்றனர். 2014-ல் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.

முதல்வராகப் பொறுப்பேற்கும் ஆனந்திபென் படேலுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் மோடி

4. ஆனந்திபென் படேல்:

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் எனும் பெருமைக்குரியவர். மோடிக்குப் பிறகு முதல்வரானவர் எனும் முறையில் பெருமளவு கவனம் ஈர்த்தவர். பாஜகவில் 75 வயதைக் கடந்தால் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி, 2016-ல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஆனந்திபென். ஆனால், உனா நகரில் பட்டியலினத்தவர் தாக்கப்பட்ட சம்பவம், இடஒதுக்கீடு கோரி பாடிதார்கள் நடத்திய போராட்டம் ஆகியவற்றின் விளைவாகவே இவர் பதவிவிலகியதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE