மீண்டும் பறக்கத் தயாராகிறது ஜெட் ஏர்வேஸ்

By காமதேனு டீம்

திவால் நடவடிக்கைகளின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான சேவை, மீண்டும் தொடங்குகிறது. தனது உள்நாட்டுப் பயணிகள் சேவையை 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் தொடங்குகிறது. அந்நிறுவனத்தை ஏலத்தில் வாங்கியிருக்கும் ‘ஜலன் கர்லோக் கன்சார்டியம்’ என்ற நிறுவனம் இந்தத் தகவலை இன்று (செப்.13) அறிவித்திருக்கிறது.

அதிகக் கடன் சுமையாலும், நிதிப் பற்றாக்குறையாலும் 2019 ஏப்ரலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை முற்றாக நிறுத்திவிட்டது. கடன் சுமை காரணமாக திவால் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட அந்நிறுவனத்தை, மீண்டும் இயக்குவதற்கான ஒப்புதலை தேசிய கம்பெனிகள் சட்ட நடுவர் மன்றம் கடந்த ஜூனில் அளித்தது.

‘உலக விமான நிறுவன வரலாற்றிலேயே, 2 ஆண்டுகளுக்கும் மேல் சேவை நிறுத்தப்பட்ட நிறுவனம் புதுப்பிக்கப்படுவது இதுவே முதல்முறை’ என்று ஜலன் கர்லோக் கன்சார்டியம் நிறுவனத்தின் தலைவர் முராரி லால் ஜலன் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்துக்குக் கடன் அளித்தவர்களுக்கு சட்ட நடுவர்மன்றம் வகுத்தளித்த திட்டப்படி பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

விமானங்களை இயக்குவதற்கான சான்றிதழைப் பெறும் நடவடிக்கை தொடங்கிவிட்டது. விமான நிலையங்களுக்குச் சென்ற புதிய நிறுவன நிர்வாகிகள், விமானங்களை இரவில் நிறுத்துவதற்கும் பயணிகளுக்குச் சேவை அளிப்பதற்கான வசதிகளைச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அகலம் குறைவான விமானங்கள் குத்தகைக்குப் பெற்று உள்நாட்டு சேவையில் முதலில் ஈடுபடுத்தப்படும். டெல்லி - மும்பை மார்க்கத்தில் முதல் சேவை இருக்கும் எனத் தெரிகிறது. தலைமையகமும் மும்பையிலிருந்து டெல்லிக்கு மாறுகிறது. வெளிநாட்டு விமான சேவை அடுத்த ஆண்டின் 3 அல்லது 4-வது காலாண்டில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் 50 விமானங்களையும், 5 ஆண்டுகளில் 100 விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்த நிர்வாகம் உத்தேசித்திருக்கிறது.

தற்போது 150-க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 2021-22 ஆம் ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லா நிலைகளிலும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE