70 ஆண்டுகளில் காங்கிரஸ் நிறுவியதை 7 ஆண்டுகளில் பாஜக விற்றுவிட்டது

By காமதேனு டீம்

எழுபது ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நிறுவியவற்றை ஏழே ஆண்டுகளில் பாஜக விற்றுவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினர். காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று (செப்.11) நடந்தது. அதில் பேசியபோது ராகுல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“காங்கிரஸ் கட்சி எப்போதுமே தேச நிர்மாணப் பணியில் மட்டுமே தன்னை ஈடுபடுத்தி வந்தது. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலின்போது மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று அனைவரும் குற்றம்சாட்டினர். ஆனால் புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடியை ஊடகங்கள் கேள்வியே கேட்கவில்லை. காங்கிரஸ் எழுபது ஆண்டுகளில் உருவாக்கியவற்றையெல்லாம் பாஜக ஏழே ஆண்டுகளில் விற்றுவிட்டது. கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் மக்களுக்குச் செய்த அரும் தொண்டு பாராட்டுக்குரியவை” என்றார் ராகுல் காந்தி.

நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி. வேணுகோபால், “இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் நானும் உறுப்பினராக இருந்திருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் நானும் இருந்தேன். இந்த அரசை மாற்றிவிட்டு நாட்டுக்கு நன்மைகளை நம்மால் செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.

மாநிலங்களவை உறுப்பினர் தீபீந்தர் சிங் ஹூடா பேசுகையில், “நாட்டில் ஜனநாயகத்துக்கு இப்போது பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக அரசு காது கொடுத்த கேட்கத் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளின் குரல்களைத் தொடர்ந்து ஒடுக்கவே பார்க்கிறது” என்று கூறினார்.

“மக்களவையில் பாஜகவுக்கு வெறும் இரண்டே உறுப்பினர்கள் இருந்தபோதும் எதிர்க்கட்சியாக அவர்களை மதிப்புடன் நடத்தினோம். இப்போது எதிர்க்கட்சிகள் பேசக்கூட முடியாமல் ஒடுக்குகிறது பாஜக” என்று மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சக்திசிங் கோஹில் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE