இரு நடுவர் மன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

By காமதேனு டீம்

தேசிய நிறுவனங்கள் சட்ட நடுவர்மன்றம் (என்சிஎல்டி), வருமானவரி மேல்முறையீட்டு நடுவர்மன்றம் (ஐடிஏடி) ஆகிய இரண்டுக்கும் நீதித் துறை சார்ந்த, கணக்கீட்டுத்துறை உறுப்பினர்களை நியமித்திருக்கிறது மத்திய அரசு.

நடுவர் மன்றச் சீர்திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த விதத்தைக் கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், பல முறை அறிவுறுத்தியும் நடுவர் மன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமனத்தை இறுதி செய்யாமல் இருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகு நடுவர் மன்ற உறுப்பினர்களை முழுமையாக நியமித்துள்ளது அரசு.

வழக்கின் பின்னணி

நடுவர் மன்றங்களில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை எதிர்த்து, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கிறீர்கள், எங்களுடைய தீர்ப்புகளை மதிப்பதே இல்லை” என்று கடந்த 6-ம் தேதி, மத்திய அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் எச்சரித்தது. இந்நிலையில், மத்திய அரசு நடுவர் மன்ற உறுப்பினர்களை நியமித்திருக்கிறது.

உறுப்பினர்களின் விவரம்

தேசிய நிறுவனங்கள் சட்ட நடுவர் மன்றத்துக்கு நீதித் துறை சார்ந்த 8 உறுப்பினர்களும் கணக்கீட்டுத் துறையின் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு நீதித் துறை உறுப்பினர்கள்: தெலபுரோலு ரஜனி (ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி), பிரதீப் நரஹரி தேஷ்முக் (மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி), எஸ். ராமதிலகம் (சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி), தர்மேந்தர் சிங் (முதன்மை அதிகாரி, டெல்லி டிஆர்டி-3), ஹர்நாம் சிங் தாக்கூர் (ஓய்வுபெற்ற தலைமைப் பதிவாளர் – பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம்),பி. மோகன்ராஜ் (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சேலம், தமிழ்நாடு), ரோஹித் கபூர் (வழக்கறிஞர்), தீப்சந்திர ஜோஷி (மாவட்ட நீதிபதி) ஆகிய 8 நீதித் துறை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கானவை அல்லது உறுப்பினர்கள் 65 வயதை எட்டும் வரை - இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இப்பதவியில் இருக்கலாம்.

வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாய நடுவர்மன்றத்துக்கும் 13 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் நீதித் துறையினர், 7 பேர் கணக்கீட்டுத் துறையினர். நீதித்துறை உறுப்பினர்கள் சஞ்சய் சர்மா (வழக்கறிஞர்), எஸ். சீதாலட்சுமி (வழக்கறிஞர்), சத்தின் கோயல் (கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி), அனுபவ் சர்மா (கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி), டி.ஆர். செந்தில்குமார் (வழக்கறிஞர்), மன்மோகன் தாஸ் (எஸ்பிஐ சட்ட அதிகாரி) ஆகியோர் இந்த நடுவர் மன்றத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய பதவிக்காலம் 4 ஆண்டுகள் அல்லது 67 வயதை எட்டும் வரை – இவ்விரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE