விவசாயிகளை ஆதரித்து வருண்காந்தி புதுக் கடிதம்

By காமதேனு டீம்

உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும் இந்திரா காந்தியின் பேரனுமான வருண் காந்தி, விவசாயிகளுக்கு மேலும் சலுகைகளையும் மானியங்களையும் தர வலியுறுத்தி புதிதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“கரும்புக்கு அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை போதாது, இதை மேலும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே உயர்ந்திருக்கிறது. 2021-22 ஆண்டில் கரும்புக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கொள்முதல் விலை அறிவிக்கப்பட வேண்டும். கரும்பு சாகுபடிக்குத் தேவையான இடுபொருள் செலவு அதிகரித்துவிட்டதை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

“உத்தரப் பிரதேச மாநிலத்தில் 45 லட்சம் கரும்பு சாகுபடியாளர்களுக்கு (84%), சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் கோடி நிலுவைத் தொகையைத் தந்துவிட்டதாகவும் அது கூறுகிறது. எஞ்சியவர்களுக்கும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

“கோதுமை, நெல் சாகுபடி செய்வோருக்கு குவிண்டாலுக்கு ரூ.200 போனஸ் தொகையாக மேலும் தர வேண்டும், அவர்களுக்கு விதைகளை மானிய விலையில் தர வேண்டும், டீசல் பயன்படுத்தி பாசனம் செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.20 டீசல் மானியம் தர வேண்டும், மின்சாரக் கட்டணத்தையும் அரசு குறைக்க வேண்டும் அல்லது மானியம் தர வேண்டும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தருவதை இரட்டிப்பாக்க வேண்டும், அத்துடன் விவசாயிகளுக்கு தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலையும் வழங்க வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னால் போராடும் விவசாயிகள் முசாபர் நகரில் பொதுக்கூட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த வருண், விவசாயிகளுடன் அரசு மீண்டும் பேச வேண்டும், அவர்கள் நம்முடைய ரத்தமும் சதையுமாவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE