குஜராத் அடுத்த முதல்வர் யார்?

By காமதேனு டீம்

குஜராத் முதல்வர் பதவியை விஜய் ரூபானி நேற்று ராஜிநாமா செய்திருக்கும் நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக மும்முரமாக இறங்கியிருக்கிறது.

காந்திநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று (செப்.12) மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது. இந்த ஆலோசனையில் பங்கேற்க பாஜகவின் மத்திய பார்வையாளரும் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் இன்று காலை குஜராத் சென்றடைந்தார். அவருடன் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக்கும் சென்றுள்ளார். மாநில பாஜக தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த ஆலோசனையில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரூபானி தனது ராஜிநாமா கடிதத்தை குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் நேற்று சமர்ப்பித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில் முதல்வர் விஜய் ரூபானி பதவிவிலகியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பதவி விலகியதற்குப் பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் விஜய் ரூபானியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என கட்சித் தலைமை அதிருப்தியடைந்ததாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர். குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலுடன் விஜய் ரூபானிக்கு இருந்த கசப்புணர்வும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

புதிய முதல்வர் பதவிக்கு சி.ஆர்.பாட்டீல், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் அமைச்சர் கோர்தன் ஸ்டாஃபியா, மத்திய ஆமைச்சர் மன்சுக் மாண்டவியா மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதிலிருந்து சர்ச்சையில் அடிபட்ட பிரஃபுல் படேலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE