ஆஆக தேசிய ஒருங்கிணைப்பாளராக கேஜ்ரிவால் மீண்டும் தேர்வு

By காமதேனு டீம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சிலின் இணையவழிக் கூட்டம் நேற்று (செப்.11) நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட மொத்தம் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் கேஜ்ரிவால் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார். நேற்று நடந்த கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களில் பலர் இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

நேற்றைய கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகள் போன்று ஆம் ஆத்மி கட்சியை மக்கள் கருதிவிடக் கூடாது என்றே தான் விரும்புவதாகக் கூறினார். கட்சிப் பதவிகள், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஆகியவை குறித்த ஆசைகளை ஆம் ஆத்மி கட்சியினர் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். டெல்லி ஆம் ஆத்மி அரசின் ஆட்சியின் நிர்வாகம் செயல்படும் விதத்தைப் பார்க்கும் நாட்டு மக்கள் ஆம் ஆத்மி கட்சிதான் ஒரே நம்பிக்கை என்று கருதுவதாகப் கேஜ்ரிவால் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (செப்.12) காலை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கேஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், கட்சியின் தேசியச் செயலாளராக மூத்த தலைவர் பங்கஜ் குப்தா, பொருளாளராக மாநிலங்களவை உறுப்பினர் என்.டி.குப்தா ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் கேஜ்ரிவால் தொடர்கிறார். தற்போது மூன்றாவது முறையாக அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE