ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைத்திருக்கும் தாலிபான்கள் மீது, உலகின் ஒட்டுமொத்த பார்வையும் குவிந்திருக்கிறது. தாலிபான்களின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த செய்திகளும், தாலிபான் அரசின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த ஊகங்களும், அச்சங்களும் பல்வேறு கோணங்களில் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆப்கன் அரசின் நகர்வுகளை இந்தியாவும் உலக நாடுகளும் எப்படிப் பார்க்கின்றன? இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
வாக்கைக் காப்பாற்றாத தாலிபான்கள்
ஆகஸ்ட் 15-ல் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்கள், உலகின் பார்வையில் மிதவாத அமைப்பாகத் தங்களைக் காட்டிக்கொள்ள ரொம்பவே பிரயத்தனம் செய்தார்கள். ஆனால், செப்டம்பர் 8-ல் ஆட்சியமைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோது, அந்த மிதவாத முகம் எத்தனை போலியானது என்பது நிரூபணமானது. தீவிரமான அடிப்படைவாதிகளும், தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர்களும் நிறைந்த அமைச்சரவைதான் ஆப்கனில் பொறுப்பேற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 17 பேர் மீது பொருளாதாரத் தடை, பயணங்களுக்குத் தடை உள்ளிட்ட தடைகளை ஐநா ஏற்கெனவே விதித்திருக்கிறது.
பெண்களுக்கு அமைச்சரவையில் இடமே இல்லை. பிற இனக்குழுக்களுக்கும் போதிய இடமளிக்கவில்லை. பஷ்தூன்களே பிரதான இடம் பிடித்திருக்கின்றனர். இத்தனைக்கும் காபூலைக் கைப்பற்றிய பின்னர், இதுதொடர்பாகத் தாலிபான்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசியிருந்தனர். இப்படி, சொல் ஒன்றாகவும் செயல் வேறாகவும் செயல்படும் தாலிபான்களிடம், அமைதிக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு பகுதியை வடக்குக் கூட்டணிப் படையிடமிருந்து கைப்பற்ற தாலிபான்கள் மேற்கொண்ட தந்திரங்கள் முதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்வரை, தற்போது தாலிபான்கள் காட்டுவது கோர முகத்தைத்தான்!
வீடு புகுந்து ‘தேடுதல்’ நடத்துவது முதல், ஜனநாயக முறையில் போராடுபவர்களைத் தாக்குவது, பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதி மறுப்பதுவரை தாலிபான்களின் பல்வேறு செயல்பாடுகள் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் விதைத்திருக்கின்றன.
எனினும், 3 வார கால ஒழுங்கின்மையை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாகத் தாலிபான்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது சீனா. கூடவே, அரசியல் கட்டமைப்பிலும், உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையிலும் நிதானமான அணுகுமுறையைத் தாலிபான்கள் கொண்டிருக்க வேண்டும் என்று சம்பிரதாய வார்த்தைகளைக் கூறியிருக்கிறது. “ஆப்கன் விஷயத்தில் பழைய லென்ஸ் வழியாகப் பார்ப்பதைவிட்டுவிட்டு, நடைமுறை சார்ந்த அணுகுமுறையை உலக நாடுகள் கைக்கொள்ள வேண்டும்” என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. நிச்சயமற்ற இந்தச் சூழலில், இந்தியாவுக்கான சவால்கள் மிக அதிகம்.
இந்தியா என்ன செய்ய முடியும்?
பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு, இந்தியாவுடன் மிகப் பரந்த எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொண்ட நாடு ஆப்கானிஸ்தான். சொல்லப்போனால், பாகிஸ்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடு ஆப்கன் தான். ‘தூரந்த் எல்லைக்கோடு’ விஷயத்தில் பாகிஸ்தானுடன் ஆப்கனுக்கு நீண்டகாலப் பிரச்சினை உண்டு. எனவே, பாகிஸ்தானைவிடவும் இந்தியாவுடன்தான் ஆப்கானிய மக்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆப்கனின் உட்கட்டமைப்பை மேம்படுத்தியதில் இந்தியாவின் பங்களிப்பை ஆப்கானியர்கள் மட்டுமல்ல, தாலிபான்களும் மறக்கவில்லை.
இன்றைய சூழலில், ஆப்கனுக்கான உதவிகளை நிறுத்திக்கொண்டால் அந்த இடத்தைச் சீனா எளிதாகக் கைப்பற்றிவிடும் என்பதால், தாலிபான் அரசை அங்கீகரித்து, ஆப்கனுடன் நட்புறவைத் தொடர்வது நல்லது என்று இந்தியாவுக்கு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இப்போதே, 31 மில்லியன் டாலர் நிதியுதவியை ஆப்கனுக்குச் சீனா வழங்கியிருக்கிறது.
இந்தியா தனது நிதியுதவியைத் தொடர வேண்டும் என்று, தாலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் கூறியிருப்பது சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானின் காய்நகர்த்தல்கள் வேறு ஒரு கதையைச் சொல்கின்றன.
பாகிஸ்தானின் பங்கும் நோக்கமும்
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் ஆசியுடன் ஹக்கானி நெட்வொர்க் எனும் பயங்கரவாத அமைப்பைத் தொடங்கி நடத்திவந்தவர் ஹலாலுதீன் ஹக்கானி. அவரது மகனான சிராஜுதீன் ஹக்கானி, தற்போது ஆப்கனின் உள் துறை அமைச்சராகியிருக்கிறார். அவரது உறவினர்கள் 3 பேருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஹக்கானி குழு உலகிலேயே மிகத் தீவிரமான பயங்கரவாதக் குழு எனக் கருதப்படுகிறது. தற்கொலைக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இந்தக் குழு மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை ஐநா ஏற்கெனவே பட்டியிலிட்டிருக்கிறது. 2008-ல் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியது ஹக்கானி குழுதான் என அமெரிக்கா நம்புகிறது. சிராஜுதீன் ஹக்கானியின் தலைக்கு, 10 மில்லியன் டாலர் விலை வைத்த எஃப்.பி.ஐ, அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு போஸ்டர்களையும் ஒட்டியிருந்தது இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆப்கனைக் கைப்பற்றியதில் ஹக்கானி குழுவுக்குப் பிரதானப் பங்கு உண்டு என்றாலும், அக்குழுவுக்கு ஆப்கன் அரசில் பிரதான இடம் கிடைத்ததன் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான்தான் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஐஎஸ்ஐ தலைவர் ஃபயஸ் அகமது, காபூலுக்குச் சென்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தாலிபான்களுக்கு இடையே நடந்துவந்த சச்சரவுகள் அடங்கின.
இதில் 2 நோக்கங்கள் பாகிஸ்தானுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒன்று, தற்காப்பு. இன்னொன்று இந்தியா மீதான பகைதீர்ப்பு. ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) எனும் அமைப்பு பாகிஸ்தானில் நடத்திவரும் தாக்குதல்களைச் சமாளிக்க, ஹக்கானி குழு ஒரு கேடயமாக இருக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. மறுபுறம், இந்தியா மீது தாக்குதல் நடத்த அந்தக் குழுவைப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. ஆப்கனுடனான தூதரக உறவை இந்தியா புதுப்பித்துக்கொள்ளும்பட்சத்தில், இந்தியத் தூதரகங்கள் மீது ஹக்கானி குழுவை வைத்துத் தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் தயங்காது என்றும் சொல்லப்படுகிறது.
ஆப்கனில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஐஎஸ்ஐ அமைப்புக்கு இருக்கும் தொடர்பு, இந்தியாவில் எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உணர்த்துகிறது. தாலிபான் அமைப்பை நிறுவிய முல்லா உமரின் மகன் முல்லா யாகூப், ஆப்கனின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியிருக்கிறார். சிராஜுதீன் ஹக்கானியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், பாகிஸ்தானுக்கும் நெருக்கமானவர். தாலிபானின் பல முக்கியத் தலைவர்களை ஆட்டுவிக்கும் அளவுக்குப் பாகிஸ்தானுக்குச் செல்வாக்கு உண்டு. ஆப்கனின் இடைக்கால அரசில் பாகிஸ்தான் மாற்றங்களைச் செய்யவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உன்னிப்பாகக் கவனிக்கப்படும் நகர்வுகள்
எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதற்கு ஆப்கன் மண்ணைப் பயன்படுத்தக் கூடாது என்று தாலிபான்களை எச்சரித்திருக்கும் ஐநா, இவ்விஷயத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அமெரிக்கா, ஜெர்மனி இணைந்து நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இணையச் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஐநாவின் வார்த்தைகளையே எதிரொலித்திருக்கிறார். செப்டம்பர் 9-ல் நடந்த பிரிக்ஸ் காணொலி மாநாட்டில் பிரதமர் மோடியும் இதை வலியுறுத்தியிருக்கிறார்.
பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வதில் நீண்டகால அனுபவம் கொண்ட இந்தியா, எல்லையைப் பாதுகாக்கும் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலர் நிகலோய் பத்ருஷேவ், பிரிட்டனின் எம்ஐ-6 உளவு அமைப்பின் தலைவர் ரிச்சர்டு மூர் ஆகியோர் இந்தியாவுக்கு வந்து, பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்டது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேசிய வில்லியம் பர்ன்ஸ், பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவுடனும், ஐஎஸ்ஐ தலைவர் பயஸ் ஹமீதுடனும் பேசியிருக்கிறார். ஆப்கனில் தாலிபான் ஆட்சி அமைந்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியத் தூதர், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் எனப் பலரும் பாகிஸ்தானுக்குச் சென்று ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். இந்தச் சூழலில், ஆப்கனுடனான உறவைப் பேணுவதில் இந்தியா எந்த வழிமுறைகளைக் கையாளும் என்பது இன்றைக்கு மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்தியா மீதான எதிர்பார்ப்பு
ஆப்கனில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி, அங்கிருந்து வெளியேறிய காலகட்டத்தில் ரஷ்யாவுடனான நெருங்கிய நட்புறவில் இந்தியா இருந்தது. இப்போது அமெரிக்காவுடன் நட்பில் இருக்கிறது. எனவே, தாலிபான் அரசின் ஒவ்வொரு செயல்பாடும் இந்தியாவின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து இந்து குஷ் அமைதி உச்சி மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதில் ஈரான், துர்க்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்றும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. தஜிகிஸ்தானுடன் இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இவற்றையெல்லாம் வைத்து, இந்தியா எப்படிக் காய்நகர்த்தப்போகிறது எனும் கேள்வியில் அடங்கியிருப்பது இந்தியாவின் பாதுகாப்பு விவகாரம் மட்டுமல்ல, ஆப்கானிய சாமானியர்களின் எதிர்காலமும்தான்!