நிஜமானது நீரஜ் சோப்ராவின் கனவு

By காமதேனு டீம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தன்னுடைய நீண்ட நாள் கனவொன்றை நனவாக்கி மகிழ்ந்திருக்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அவர் பல முறை விமானத்தில் சென்றிருந்தாலும் அவருடைய பெற்றோர் விமானத்தில் சென்றதே இல்லை. அவர்களை ஒருமுறை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு நீண்ட நாளாக இருந்தது.

இந்நிலையில் அந்த ஆசையை இன்று (செப்.11) அவர் நிறைவேற்றிக்கொண்டார். தன்னுடைய பெற்றோருடன் விமானத்துக்குள் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் அவர் வெளியிட்டார். எந்த இடத்திலிருந்து எங்கு சென்றார் என்ற விவரம் அதில் இல்லை. இருந்தும் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றுள்ளனர்.

“இந்தப் புகைப்படத்தைச் சேமித்து வையுங்கள். உங்களுடைய மனம் சோர்வடையும்போது இதைப் பாருங்கள். உள்ளுக்குள் லட்சிய வெறி இருந்தால் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கும் வரும்” என்று ஒருவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். “உங்களுடைய எல்லா கனவுகளும் நிறைவேறட்டும், மேலும் மேலும் நீங்கள் சாதிக்க வேண்டும்” என்று இன்னொருவர் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE