குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!

By காமதேனு டீம்

ஆமதாபாத்:

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அந்தப் பதவியிலிருந்து சனிக்கிழமை விலகினார். பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளின்படி, ஐந்தாண்டுகள் பதவி வகித்த பிறகு விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியில் அனைவருக்கும் பதவிகள் தரப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக தாம் விலகியதாகவும் கட்சி தமக்கு அடுத்து இடும் கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் ரூபானி குறிப்பிட்டார்.

குஜராத்தின் வளர்ச்சிக்காக செயல்படும் வாய்ப்பைத் தந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநில மக்கள் ஆகியோருக்கு தன்னுடைய நன்றியையும் விஜய் ரூபானி தெரிவித்துக்கொண்டார். அடுத்த ஆண்டு குஜராத் சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் பாஜக மிகவும் போராடித்தான் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. இந்த நிலையில் ரூபானி ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் இப்போது ஆமதாபாதில் முகாமிட்டிருக்கிறார். மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் அவருடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். இதைத் தொடர்ந்தே ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உத்தராகண்ட், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக தன்னுடைய முதலமைச்சர்களை அடுத்தடுத்து மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE