இந்தியாவில் மறைமலை நகர் (சென்னை), சனந்த் (ஆமதாபாத்) ஆகிய இடங்களில் இயங்கிவந்த கார் உற்பத்தி ஆலைகளை மூடிவிட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துவிட்டது. இதனால், நேரடியாக 4,000 பேர் வேலையிழக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
1995-ல் இந்தியாவில் கார் தயாரிப்புத் தொழிலில் கால் பதித்த அமெரிக்க நிறுவமான ஃபோர்டு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முடிவை எடுப்பதற்குப் பல்வேறு பிரச்சினைகள் முக்கியக் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.
இந்தியாவில் மோட்டார் கார்களைத் தயாரித்து விற்பதில் போதிய லாபம் கிட்டவில்லை என்று கூறுகிறது ஃபோர்டு நிறுவனம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்த வகையில் மட்டும் தங்களுக்கு 200 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதால் உற்பத்தியை நிறுத்திவிட்டு, லாபம் ஈட்டும் வழிகளைக் காண வேண்டியிருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. மறைமலை நகர், சனந்த் தொழிற்சாலைகளில் படிப்படியாக உற்பத்தி நடவடிக்கைகளைக் குறைத்து ஓராண்டில் முழுதாக நிறுத்திவிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவில் தேவைக்கும் அதிகமாக கார்கள் உற்பத்தியாவதாலும், போட்டி நிறுவனங்களின் கார்களுக்குச் சந்தை அதிகம் இருப்பதாலும் தங்களுடைய கார்களை விற்பது கடினமாகிவிட்டதை அந்நிறுவனம் உணர்ந்துள்ளது. பிஎஸ் 6 தரத்துக்கு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனையாலும், பெருந்தொற்றால் கார்களின் உற்பத்தியும் தேவையும் கணிசமாகக் குறைந்ததாலும், கார் உற்பத்திக்கு மிகவும் தேவைப்படும் செமி கண்டக்டருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாலும் ஃபோர்டு நிறுவனம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள், இந்தியாவில் கார் உற்பத்தியைக் கைவிடும் சூழலுக்கு ஃபோர்டு நிறுவனத்தைத் தள்ளியிருக்கின்றன.
கார் உற்பத்தியை நிறுத்தினாலும், தங்களிடம் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவைகள் அளிக்கப்படும் என்றும், மின்சாரம் மற்றும் பிற எரிபொருட்களைப் பயன்படுத்தும் கலப்பு தொழில்நுட்ப கார்கள், முழு மின்சாரக் கார்கள் இந்தியாவில் விற்கப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.