டெல்லி மெட்ரோ வழக்கில் அனில் அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பு

By காமதேனு டீம்

டெல்லி மெட்ரோ வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு சரியே என்று உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வியாழக்கிழமை அறிவித்தது.

இந்தத் தீர்ப்பால் அனில் அம்பானிக்கு ரூ.4,660 கோடி இழப்பீடாகக் கிடைக்கும். திவால் நிலைக்குச் சென்றுவிட்ட அனில் அம்பானி வாங்கிய கடன்களை அடைக்கவும் கவுரவத்தை மீட்கவும் இது உதவும். இத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களுக்கெல்லாம், பங்குச் சந்தையில் அவருடைய நிறுவனப் பங்கு மதிப்புகள் சராசரியாக 5 சதவீதம் உயர்ந்தன.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் இந்த வழக்கைத் தொடுத்தது. தில்லி மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தை 2038 வரையில் நிர்வகிக்க, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2008-ல் ஒப்பந்தம் பெற்றது. கட்டணம் தொடர்பாகவும் இயக்கம் தொடர்பாகவும் இருதரப்புக்கும் அடிக்கடி பூசல்கள் மூண்டன. ஒப்பந்தத்தை மீறி தில்லி மெட்ரோ நிறுவனம் நடப்பதால், ஒப்பந்த முறிவுக் கட்டணம் தரப்பட வேண்டும் என்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. நடுவர் மன்றம் அதற்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு, நடுவர் மன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE