தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானம் வெள்ளோட்டம்!

By காமதேனு டீம்

இந்திய விமானப்படையின் சி 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானம், ராஜஸ்தான் மாநில தேசிய நெடுஞ்சாலையில் இன்று வெற்றிகரமாக இறக்கி ஓட்டப்பட்டது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, விமானப்படைத் தலைமை தளபதி ஆர்கேஎஸ் படௌரியா அந்த விமானத்தில் வந்தனர். தேசிய நெடுஞ்சாலை எண் 925-ல் சட்டா - கந்தாவ் பகுதியில் இச் சோதனை நடந்தது. சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம், ஏ.என். 32 ராணுவப் போக்குவரத்து விமானம், எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர் ஆகியவை நிகழ்த்திய சாகசங்களையும் அமைச்சர்கள் பிறகு பார்த்தனர்.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு 40 கிலோ மீட்டர் அருகில், பாரத்மாலா திட்டத்தில் நெடுஞ்சாலையைப் போர் விமானங்களும் தரையிறங்கும் ஓடுபாதையாக தரப்படுத்தும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது 3 கிலோ மீட்டர் நீளம் 33 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதையாகும். இந்தச் சாலையின் இரு புறங்களிலும் போர் விமானங்களை நிறுத்துவதற்கான இடமும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகள் 2019 ஜூலையில் தொடங்கி 2021 ஜனவரியில் முடிக்கப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள் தரை இறங்குவது இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. மிகப் பெரிய சரக்கு விமானங்கள் போன்றவற்றுக்காக நெடுஞ்சாலையை திட்டமிட்டு அமைப்பது இதுவே முதல் முறை. நாட்டின் மேற்குப் பகுதியில் இதைச் செய்திருப்பது இந்திய விமானப் படைக்கு பலத்தை மேலும் கூட்டியுள்ளது. வழக்கமான விமானப்படை ஓடுபாதைகளுடன் தேசிய நெடுஞ்சாலையும் தயாராவது தாக்குதல் திறனை அதிகப்படுத்த உதவும். விமானம் இறங்கும் ஓடுபாதை மட்டுமல்லாமல் 196.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த நெடுஞ்சாலை சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. போரில்லாத காலங்களில் இடைவெளியற்ற போக்குவரத்துக்கும் போர்க்காலங்களில் விமானப்படைக்கு மட்டும் இந்த நெடுஞ்சாலை பயன்படுத்தப்படும்.

ஜெர்மனி, சுவீடன், தென்கொரியா, தைவான், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, சிங்கப்பூர் - ஏன் பாகிஸ்தான் கூட இத்தகைய நெடுஞ்சாலை – ஓடுபாதை வசதிகளைப் பெற்றுள்ளன. இந்தியாவில் இப்போதுதான் சாலைப் போக்குவரத்து அமைச்சகமும் நெடுஞ்சாலைத் துறையும் பாதுகாப்புத் துறையுடன் கை கோத்துக்கொண்டு, ராணுவத் தேவைகளுக்கேற்பவும் சாலைகளைத் தயார்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE