எழுத, படிக்கத் தெரிந்தவர்களை அதிகம் கொண்டிருந்து மட்டும் பயனில்லை, அவர்கள் தொடர்ந்து புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். வழக்கம்போல கேரளம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது. கேரளத்தில் உள்ள பெரும்குளம் கிராமம் குறித்து அம்மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல் வேகமாக வைரலாகி வருகிறது. ‘புத்தக கிராமம்’ என்ற பெருமையும் அந்த கிராமத்துக்குக் கிடைத்திருக்கிறது.
பறவைகள் குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்வதை ஊக்குவிக்க ஆங்காங்கே கூடுகளைத் தொங்கவிடும் ஆர்வலர்களின் பாணியில், கிராமத்து வீதிகளில் ஆங்காங்கே 2 அல்லது 3 வரிசைகளைக் கொண்ட புத்தக அலமாரிகள் மரங்களிலும் சுவர்களிலும் பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ளன. அவரவர் படித்த புத்தகங்களைக் கொண்டுவந்து அந்த அலமாரிகளில் வைக்கிறார்கள். பிறர் வைக்கும் புத்தகங்களில் தங்களால் படிக்கப்படாதவை இருந்தால், வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் கொண்டுவந்து வைத்துவிடுகிறார்கள். இதனால் எல்லா புத்தகங்களையும் எல்லோரும் படிக்க முடிகிறது. இதில் நேர்மையும், புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வமும்தான் அடிப்படை.
‘உலக எழுத்தறிவு நாள்’ என்ற ஹேஷ்டேக்கை இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த புத்தகக் கூடு திட்டம் பிரபலமடையக் காரணமாக இருந்தது, அனைத்திந்திய வானொலிச் செய்திதான் என்று அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.