மழை வெள்ளத்துக்கு நடுவே 2 கர்ப்பிணிகள் துரிதமாக மீட்பு

By காமதேனு டீம்

தெலங்கானாவில் நெருக்கடியான நேரத்தில், உரிய மாற்று யோசனைகள் மூலம் 2 கர்ப்பிணிகளைக் காப்பாற்றிய அவசர உதவிக் குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ராஜண்ணா மாவட்டத்தில் வசிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 7) காலை பிரசவ வலி எடுத்தது. அவர் இருந்த பகுதியும் சாலைகளும் அதற்கு முந்தைய நாட்களில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. லாரி மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல உறவினர்கள் முயன்றனர். எனினும், மூன்றடி உயரத்துக்குத் தண்ணீரும் சேறும் இருந்ததால் லாரி மூலம் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. எந்த நிலத்திலும் செல்லக்கூடிய எஸ்கவேட்டர் (சுரங்கங்களில் மண் அள்ளும் இயந்திரம்) அருகில் இருப்பதால் அதில் கொண்டு செல்லலாம் என்று ஒருவர் கூறினார். அப்படியே அந்தப் பெண்ணை வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து, மேடான இடத்துக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து காவல் நிலைய வாகனத்தில் ஏற்றி அருகிலிருந்த பெரிய மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டனர்.

அதற்கும் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) இதேபோல் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. விகாராபாத் மாவட்டத்தின் கரம்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தார். அவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியாதபடிக்கு சாலையில் வெள்ளம் ஓடியது. இதனால் ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்ற பிறகு, பிற வாகனங்களுடன் சேர்ந்து ரயில் பாதை ஓரம் நின்றது. அப்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவி கேட்டனர். ரயில் பாதைகளை ஆய்வுசெய்யப் பயன்படுத்தும் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட டிராலி கொண்டுவரப்பட்டு கர்ப்பிணியை அதில் படுக்கவைத்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தக்க நேரத்தில் ரயில்வே உயரதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டனர்.

சக உயிர்களைக் காப்பாற்றுவது என்ற முடிவை எடுத்துவிட்டால், அதற்கு வழி இல்லாமல் போகாது என்பதை இந்த 2 சம்பவங்களும் உணர்த்துகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE