பெண் நிருபருக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச ஸ்டிக்கர்

By காமதேனு டீம்

கேரளத்தில், பெண் நிருபருக்கு ஆபாசமான ஸ்டிக்கரை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியதாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து சட்ட ஆலோசனை பெற்ற பிறகு, இப்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவி வகிக்கிறார் என்.பிரசாந்த். அமெரிக்காவின் ஆழ்கடல் மீன்பிடி நிறுவனத்துடன் அவருடைய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தம் தொடர்பாகக் கேரளத்தில் சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக விளக்கம் தரமுடியுமா என்று பிரசாந்திடம் அந்தப் பெண் நிருபர், வாட்ஸ்-அப் மூலம் கேட்டிருந்தார்.

அதற்கு முதலில் ஒரு ஸ்டிக்கரை பிரசாந்த் அனுப்பினார். “இந்தச் சர்ச்சை தொடர்பாக உங்களுடன் பேச இது சரியான நேரம்தானா?” என்று, அடுத்து அந்தப் பெண் நிருபர் கேட்டார். அப்போது ஆபாசமான ஸ்டிக்கரைப் பதிலாக அனுப்பினார் பிரசாந்த்.

இது தொடர்பாக, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கேரள காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இப்போது ஐபிசி 509-வது பிரிவின்கீழ் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பது, அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகியவை அப்பிரிவின்கீழ் குற்றங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE