“எதிர்க்கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபத்துக்காக உங்களைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள்” என்று விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக் கூட்டங்கள் விரைவில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே அடுத்தடுத்து நடக்கின்றன, ஹரியாணாவில் ஒன்றுகூட நடப்பதில்லை. இதன் பின்னணியை விவசாயிகள் புரிந்துகொள்வது நல்லது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் ஒரேயடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு, சட்டங்களில் தங்களுக்கு என்னென்ன திருத்தங்கள் தேவை என்பதை கூறினால் அவற்றைப் பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் மகா பஞ்சாயத்து மேடைகளில் சில அரசியல் கட்சிகளின் கொடிகள் பறந்ததை அவர் சுட்டிக்காட்டினார். போராட்டக்காரர்களுக்கு சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோகதளம் ஆகிய கட்சிகள் நிதியுதவி செய்கின்றன என்றார். அரசுடன் பேச்சு நடத்த முன்வரும் விவசாயிகள் வெறுங்கையுடன் திரும்பிப் போகக் கூடாது என்பதே தங்களுடைய விருப்பம் என்பதால், பேச்சு நடத்த வாருங்கள் என்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.
“எங்களுடைய (அரசியல்) தலையெழுத்து மக்களின் கைகளில் இருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்று மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சி சார்பற்ற விவசாயிகளின் மாநாட்டில் எந்தெந்த கட்சிகளுடைய கொடிகள் பறந்தன என்று எல்லோருக்கும் தெரியும்” என்றும் அமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறினார்.