அர்ச்சகர்கள் கோயில் நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆகமுடியாது!

By காமதேனு டீம்

‘கோயில்களில் அன்றாடம் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்கள், அந்தக் கோயில்களுக்காக பக்தர்கள் உபயமாகத் தரும் நிலங்களுக்கு உடைமையாளர்களாக ஆகிவிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (செப்டம்பர் 7) இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதேவேளையில், கோயில் நிலங்களுக்கு உடமையாளர்களாக அர்ச்சகர்களின் பெயர்களை வருவாய்த் துறை பதிவேடு களிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களைச் சேர்ப்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமமாகிவிடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநில வருவாய்த் துறையின் பதிவேடுகளில், கோயில்களின் நிலங்களுக்கு அந்தக் கோயில்களின் அர்ச்சகர்களின் பெயர்கள் உடைமையாளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை நீக்க உத்தரவிட்ட மாநில அரசு, அதற்குப் பதிலாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை உரிமையாளராக சேர்க்குமாறும் உத்தரவிட்டது. அர்ச்சகர்கள் சங்கம் இதை எதிர்த்து வழக்காடியது.

அர்ச்சகர்களை ‘பூமி ஸ்வாமி’ என்று அழைத்து, நிலத்தை நிர்வகிப்பதற்கான உரிமைகள் பாரம்பரியமாக வழங்கப்பட்டிருப்பதால், அவர்களுடைய உரிமையை மாநில அரசு நிர்வாக உத்தரவு மூலம் நீக்கிவிட முடியாது என்று அர்ச்சகர்கள் தரப்பில் வழக்கறிஞர் திவ்யகாந்த் லகோட்டி வாதாடினார். கோயில் நிலங்களை அர்ச்சகர்கள் தன்னிச்சையாக விற்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று மத்திய பிரதேச அரசு சார்பில் வாதிட்ட சௌரப் மிஸ்ரா கூறினார்.

இந்நிலையில், “பல்வேறு முன்னுதாரண வழக்கு தீர்ப்புகளின்படியும், குவாலியர் சட்டப்படியும் நிலங்களை நிர்வகிக்கும் உரிமை மட்டும்தான் அர்ச்சகர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அது அவர்களைக் குடிவாரதாரராகக் (குடித்தனக்காரராக) கூட அங்கீகரிக்கவில்லை” என்று நீதிபதி குப்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். நில உடைமைப் பதிவேட்டில் எந்தக் கடவுளரின் பெயருக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டனவோ, அவருடைய பெயரை மட்டும்தான் உரிமையாளராக எழுத வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அர்ச்சகர்களின் பெயர்களை நீக்கிய அரசின் நிர்வாக உத்தரவு செல்லும். அதே வேளையில், மாவட்ட ஆட்சியர்களை நில உடமையாளர்களாகப் பதிவு செய்யும் முடிவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் நிராகரித்தனர். அரசுக்கு நேரடியாகச் சொந்தமான கோயில்களைத் தவிர மற்றவற்றுக்கு ஆட்சியரின் பெயரை நில உடைமை நிர்வாகியாகப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE