விவசாயிகளின் போராட்டத்தில் விளைந்த மத நல்லிணக்கம்

By காமதேனு டீம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின் முஸஃபர் நகரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மதநல்லிணக்கம் தொடர்பான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவது எனும் முடிவுடன் ‘கிஸான் மஸ்தூர் மகா பஞ்சாயத்து’ எனும் பெயரில், கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 5) முஸஃபர் நகரின் சிஐஜி மைதானத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிஸான் மோர்ச்சா’ இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தின் முக்கிய முழக்கமாக, ‘செப்டம்பர் 27-ல் நாடு தழுவிய முழு அடைப்பு நடத்தப்படும்’ என்றும் விவசாயிகள் அறிவித்திருக்கின்றனர்.

கூடவே, மதம், சாதி அடிப்படையிலான பிரிவினைகளைக் கடந்து விவசாயிகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் முடிவெடுத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ‘அல்லாஹு அக்பர்’ எனும் முழக்கமும், ‘ஹரஹர மகாதேவ்’ எனும் முழக்கமும் முஸஃபர் நகர் நகரின் போராட்டக் களத்திலிருந்து ஒலித்தது, விவசாயிகளின் ஒற்றுமைக்குக் கட்டியம் கூறுகிறது. தேசியக் கொடியுடன் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட விவசாய அமைப்புகளின் கொடிகளையும் அங்கே காண முடிந்தது. இனி, ‘மதக் கலவரம் நிகழ வாய்ப்பளிக்கக்கூடாது; அதன் மூலம் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட வழிவகுக்கக்கூடாது’ எனும் முக்கிய முடிவை விவசாய அமைப்புகள் எடுத்திருக்கின்றன.

2013-ல் இதே முஸஃபர் நகரில்தான், ஜாட் சமூகத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரங்கள் வெடித்தன. அதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி வீட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. அடுத்த ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 71-ல் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE