ஜாவேத் அக்தர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு

By காமதேனு டீம்

இந்தித் திரைப்படப் பாடலாசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் வீட்டுக்கு, மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தாலிபான்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்டு அவர் பேசியதாகக் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

“உலகம் முழுக்க வலதுசாரிகள் ஒரேவித சிந்தனையுடன்தான் இருக்கின்றனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க விரும்புகின்றனர். இங்கே ‘இவர்களோ’ இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்கின்றனர்” என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜாவேத் அக்தர் கூறியிருந்தார். ‘இவர்கள்’ என்று அவர் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் அது தங்களைத்தான் குறிக்கிறது என ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருதுகிறார்கள். இதையடுத்து, “தன்னுடைய முறையற்ற ஒப்பீட்டுக்காக அக்தர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான ராம் கடம் கண்டனம் தெரிவித்தார்.

தாலிபான்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தும் சிவசேனை கட்சியும் கண்டித்துள்ளது. “இந்து ராஷ்டிரம் என்பதும் தாலிபான்கள் விரும்பும் இஸ்லாமிய அரசும் ஒன்றேதான் என்று எப்படிக் கூற முடியும்?” என்று, சிவசேனை கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது திங்கள்கிழமை தலையங்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE