நம்பினால் நம்புங்கள்... வெண்டைக்காய் கிலோ ரூ.800!

By காமதேனு டீம்

ஏற்கெனவே பெட்ரோல், கியாஸ் விலை குறித்த கவலையில் இருப்பவர்கள், இந்தச் செய்தியை வாசிப்பதைத் தவிர்த்தல் நலம். பின்னே, ஒரு கிலோ வெண்டைக்காய் 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், சாமானியர்களுக்கு வயிறு எரியாதா?

ஆம்! மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில், மிஸ்ரிலால் ராஜ்புத் எனும் விவசாயியின் நிலத்தில் விளையும் வெண்டைக்காய் கிலோ 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. போபாலைவிட டெல்லியில் இதற்கு கிராக்கி அதிகம். பணக்கார டெல்லிவாலாக்கள் செலவு கணக்குப் பார்க்காமல் இதை வாங்கி உண்டு மகிழ்கிறார்கள். காரணம், இது வழக்கமான வெண்டைக்காய்களைப் போல பச்சை நிறத்தில் இல்லாமல் ஊதாவும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கிறது. பொதுவாக இதை ‘லால் பிண்டி’ (சிவப்பு வெண்டைக்காய்) என்றே அழைக்கிறார்கள்.

அதற்காக, இவ்வளவு அதிக விலையா என்கிறீர்களா? இதற்கு மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் காரணங்கள்தான், இதன் இமாலய விலைக்குக் காரணம்.

வழக்கமான நிறத்தில் இல்லாததால் இது ரத்தக் கொதிப்பைக் குறைக்கிறதாம், ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறதாம். இதய நோய் வராமல் காக்கிறதாம். யாராவது சோதனைச் சாலையில் ஆராய்ந்து இதையெல்லாம் சொன்னார்களா என்று கேட்கிறீர்களா? இந்த வெண்டைக்காயை விளைவிக்கும் விவசாயி ராஜ்புத் சொல்கிறார், வாடிக்கையாளர்கள் நம்புகிறார்கள். நாம் என்ன சொல்ல முடியும்?

இந்த ஸ்பெஷல் வெண்டைக்காயின் விதையை, வாராணசியில் உள்ள வேளாண் கழகத்தில் அவர் வாங்கியிருக்கிறார். ரசாயன உரங்கள் போடாமல் சாகுபடி செய்கிறார். இதைப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 40-50 முதல் அதிகபட்சம் 70-80 குவிண்டால்கள் வரை சாகுபடியாகிறதாம்.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ராணி – சங்கல்ப் பரிஹார் என்ற விவசாய தம்பதி கடந்த ஜூனில், செம்மாணிக்க நிறத்தில் மாங்காய்களைச் சாகுபடி செய்து விற்றனர். இது ஜப்பானில் விளையும் மியாசாகி ரகம் என்று அவர்களுக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். சர்வதேசச் சந்தையில் இது ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய் வரையில் விற்குமாம். பசுமைப் புரட்சி கண்ட இந்திய விவசாயம், பல வண்ணக் கோலங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE