போராடும் விவசாயிகளின் வேதனையை அரசு புரிந்துகொள்ள வேண்டும்!

By காமதேனு டீம்

புதுதில்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டம் உட்பட 3 முக்கிய சட்டங்களை எதிர்த்து, கடந்த 9 மாதங்களாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள், உத்தர பிரதேச தேர்தலில் வீடு வீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது என்று, முசாபர்நகரில் இன்று (செப்டம்பர் 5) நடந்த மகா பஞ்சாயத் பொதுக்கூட்டத்தில் முடிவெடுத்தனர்.

இன்றைய கூட்டத்தில் லட்சக்கணக்கில் விவசாயிகள் திரண்டதால், அந்த மாபெரும் மைதானமே நிரம்பி வழிந்தது. உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகளை விரிவுபடுத்துவோம், செப்டம்பர் 27-ல் 3 சட்டங்களுக்கும் எதிராக அனைத்திந்திய அளவில் முழு வேலை நிறுத்தக் கிளர்ச்சியை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

ஹரியாணாவின் கர்நால் நகரத்தில், ஆகஸ்ட் 28 அன்று நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுத்த விவசாயிகள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் அடக்குமுறைகளைக் கண்டித்து, முசாபர் நகரில் இந்தப் பொதுக்கூட்டம் நடந்தது. போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. “மிகச் சில விவசாயிகள்தான் போராடுகிறார்கள் என்று ஆளும் கட்சி கூறுகிறது, இந்தக் கூட்டத்துக்கு வந்திருப்பவர்கள் மிகச் சிலர்தானா என்பதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்” என்று விவசாயிகளின் பெருந்தலைவர் மகேந்திர சிங் திகைத்தின் புதல்வர், ராகேஷ் திகைத் சவால் விட்டார்.

வருண் காந்தி ஆதரவு

ஆளும் பாஜக எம்பி-யான வருண் காந்தி இந்தப் பொதுக்கூட்டம் தொடர்பாக ஒரு பதிவைச் செய்திருக்கிறார். “விவசாயிகளின் வேதனையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். முசாபர்நகரில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் நம்முடைய ரத்தமும் சதையுமாவார்கள். கண்ணியமான வகையில் அவர்களுடன் மீண்டும் பேச்சைத் தொடங்க வேண்டும். அவர்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய தரப்பை அனுதாபத்துடன் கேட்டு, அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு சமரசத்தை ஏற்படுத்த வேண்டும்” என்கிறது அந்தப் பதிவு.

இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர் மாரிப் பொழிய, மத்திய - மாநில அரசுகள் அனுமதி தரவில்லை என்று முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பெயரனும் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சௌத்ரி சுட்டிக்காட்டினார்.

ஹபூர், புலந்த்ஷகர், அலிகட் மற்றும் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 9 மாதங்களாக நடந்த விவசாயிகளின் கிளர்ச்சிகளிலேயே, இதில்தான் விவசாயிகள் பங்கேற்பு மிக மிக அதிகம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மத்திய அரசுக்கு நாளுக்குநாள் எதிர்ப்பு வலுக்கிறது, மதம், சாதி, மாநிலம், வர்க்கம், விவசாயிகள் – வியாபாரிகள் என்ற பேதங்களைக் கடந்து மக்கள் திரள்கிறார்கள் என்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE