பொதுநல வழக்கான சிறுமியின் கடிதம்!

By ஆர்.என்.சர்மா

இந்திய நீதித் துறை சுதந்திரமாக மட்டுமல்ல, கனிவோடும் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வை, உச்ச நீதிமன்ற நீதிபதி விநீத் சரண் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. தொழில், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. சேவைத் துறையும் பின்தங்கிவிடவில்லை. மத்திய - மாநில அரசு அலுவலகங்கள் கூட முழு அளவுக்கு இயங்க ஆரம்பித்துவிட்டன. உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களில் மட்டும் ஏன் வழக்கு விசாரணைகளை நேரடியாக நடத்தாமல் காணொலி காட்சிகளாகவே நடத்துகிறீர்கள்?” என்று இளம் சிறுமி ஒருத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதி கேட்டிருக்கிறாள்.

“இப்படிக் கேட்க வேண்டிய அவசியம் என்ன, நீதிமன்ற நடவடிக்கைகளிலேயே தலையிடுகிறாயா, உன்னுடைய எந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறது” என்று சீறியெழுந்து எதிர்க்கேள்விகளைக் கேட்காமல், அதையே விசாரணைக்குரிய பொதுநல வழக்கு மனுவாக ஏற்றுவிட்டார் தலைமை நீதிபதி என்.வி. ரமணா. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைப் பாராட்ட நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விநீத் சரண், இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் இறந்தனர், நோயுற்றவர்களின் உறவினர்கள் சிலிண்டர்களுக்காக நகரங்களில் அலைந்தனர். இந்த அவல நிலையைக் கண்ட உச்ச நீதிமன்றம் போதிய அளவு ஆக்ஸிஜன் தயாரிக்கவும், அதை உடனுக்குடன் மருத்துவ மனைகளுக்கு அனுப்ப முறையான ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டு கண்காணித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த மனிதாபிமான செயலால் உருகிய கேரளத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி லிட்வினா ஜோசப், தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினாள். அதைப் படித்த நீதிபதியும் நெகிழ்ச்சியடைந்து, இந்திய அரசியல் சட்டத் தொகுப்பு புத்தகத்தில் கையெழுத்திட்டு தன்னுடைய பரிசாக அந்தச் சிறுமிக்கு அனுப்பிவைத்தார்.

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வழக்கு விசாரணைகளை, நேரடியாகவும் காணொலிக் காட்சி வாயிலாகவும் நடத்தத் தொடங்கிவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், இதற்காக விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திலேயே மிகவும் பாதுகாப்பு தரப்பட வேண்டிய பகுதிக்குச் செல்வதற்கு வழக்கறிஞர்கள் கூட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதை அவர்கள் ஆட்சேபிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE