அட... அத நான் சொல்லலைங்க!

By ஆர்.என்.சர்மா

“ஆதார் அட்டையைக் காட்டினால்தான் மதுபானம் விற்கப்படும் என்று அரசு உத்தரவிட வேண்டும். மதுபானம் வாங்க வசதி இருப்பவர்களுக்கு உணவு தானியம் வாங்கவும் பணம் இருக்கும். அவர்களுக்கு ரேஷனில் மானிய விலையிலோ, இலவசமாகவோ உணவுப் பொருள்களைத் தருவதை நிறுத்திவிட வேண்டும்” என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியதாக, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது.

இன்ஸ்டாகிராமில் அதை மறுத்துள்ளார் டாடா. சமூக வலைதளத்தில் வெளியான அந்தத் தகவலையே அப்படியே புகைப்படம் எடுத்து, இதை நான் சொல்லவில்லை, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பது அவசியம் என்ற வேண்டுகோளையும் உடன் வைத்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் சில விஷமிகள் குழப்பம் விளைவிக்கவோ, குறும்புக்காகவோ இப்படி எதையாவது பரப்புகின்றனர். தங்களுடைய பெயரைப் போடாமல் பிரபலங்களின் பெயர்களைச் சில சமயங்களில் பயன்படுத்தி, அவர்களுக்கு பழி வரச் செய்கின்றனர். எதைப் படித்தாலும் அதன் உண்மைத் தன்மை அறியாமல் நம்புவதை மக்கள் நிறுத்த வேண்டும். இவற்றையெல்லாம் அடுத்தவருக்குப் பரப்பாமல், சும்மா இருந்தாலே இந்த வீணர்கள் உற்சாகமிழந்து ஓடி ஒளிவார்கள்.

டாடாவுக்கு இப்படி நேர்வது இது முதல் முறையல்ல. பொருளாதார வீழ்ச்சியையும் கரோனா பெருந்தொற்றையும் தொடர்புபடுத்தி, அவர் கூறியதாக ஒரு தகவல் கடந்த ஆண்டு இப்படி வெளியானபோதும் அவர் அதை மறுத்தார். இதேபோல, மற்றொரு தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா கூறியதாக, ஒரு பொய்த் தகவல் நேற்று வேகமாகப் பரவியது. அவரும் அதை விழுந்தடித்து மறுக்க வேண்டியதாயிற்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE