உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் நியமனம்

By ஆர்.என்.சர்மா

புதுதில்லி: மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க 68 பேரின் பெயர்களை, உச்ச நீதிமன்ற தலைமைத் தேர்வுக்குழு ஒரே மூச்சில் பரிந்துரைத்துள்ளது.

நியமனத்துக்குரிய 112 பேருடைய கோப்புகளைப் பரிசீலித்து, அவர்களில் 10 பெண்கள் உட்பட 68 பேர்களின் பெயர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான தேர்வுக்குழு இறுதி செய்தது. பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் 16 பேர்களைக் குறித்து கூடுதல் தகவல்களைத் தருமாறு தொடர்புடைய மாநிலங்களிடம் தேர்வுக்குழு கோரியுள்ளது.

மத்திய நீதித் துறையின் கணக்கின்படி, 25 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 465 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதில் 281 நிரந்தர நீதிபதி இடங்கள், 184 கூடுதல் நீதிபதிகளுக்கானவை. அரசு அனுமதித்துள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,098. உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிக அளவாக 68 இடங்களும், பஞ்சாப் - ஹரியாணாவில் தலா 40-ம் கொல்கத்தாவில் 36-ம் காலியாக உள்ளன.

என்.வி. ரமணா தலைமையிலான தேர்வுக்குழுவில் நீதிபதிகள் யு.யு. லலித், ஏ.எம். கன்வில்கர் இடம் பெற்றுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட 4 பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 68 பேர்களில் 44 பேர் வழக்கறிஞர்கள், எஞ்சியவர்கள் நீதித் துறை அதிகாரிகள். மிசோரத்திலிருந்து மர்லி வான்குங் என்ற நீதித் துறை பெண் அதிகாரி குவாஹாட்டி உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். மிசோரத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாகப் போவது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“உயர் நீதிமன்றங்களில் 40 சதவீத நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. சராசரியாக 50 சதவீதத்துக்கும் குறைவான நீதிபதிகளே பணியில் உள்ளனர்” என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் கவலை தெரிவித்தது. “இதற்கு நாங்கள் பொறுப்பல்ல, பட்டியலைத் தாருங்கள் நிரப்பிவிடுகிறோம்” என்றது நீதியமைச்சகம். “நாங்கள் ஒருமனதாக பட்டியலைத் தயாரித்து அளித்தால், நீங்கள் 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும்” என்று சவால்விடும் பாணியில் தேர்வுக் குழு கூறியது. அது ஏற்கப்பட்டு, சமீபத்தில்தான் உச்ச நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகள் ஒரேநாளில் பதவியேற்றனர். சூட்டோடு சூடாக தற்போது 68 பேர் பட்டியல் வந்துள்ளது. இனியாவது, எங்கள் ‘சூட்’டுகள் தீர்க்கப்பட்டால் சரி என்கின்றனர் வழக்கு தொடுத்தவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE