உபியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அதிரடி கைது!

By வெ.சந்திரமோகன்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் மற்றும் அவரது காதலரின் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

லக்னோவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். யோகி அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களையும் தெரிவித்திருந்த அவர்,

‘அதிகார் சேனா’ எனும் பெயரில் கட்சித் தொடங்கப்போவதாக, நேற்று (ஆகஸ்ட் 27) அறிவித்தார். இப்படி அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு

2019-ல், பகுஜன் சமாஜ் கட்சி எம்பி-யான அதுல் ராய் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ததாக காஜிப்பூரைச் சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருந்தார். அந்தப் பெண் மீதும், அவரது நண்பர் மீதும் மோசடிப் புகார்களை அதுல் ராய் சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக இருவர் மீதும் ஏழு புகார்கள் பதிவுசெய்யப்பட்டன. தங்கள் மீது பொய்ப் புகார்களைச் சுமத்த அதுல் ராய்க்கு அமிதாப் தாகூர் உடந்தையாக இருந்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 16-ல் உச்ச நீதிமன்றம் அருகே அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். முன்னதாக தங்கள் தற்கொலைக்குக் காரணம் அதுல் ராயும் அமிதாப் தாகூரும்தான் என சமூகவலைதளத்தில் இருவரும் பதிவுசெய்திருந்தனர். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசியிருந்த இருவரும், அதுல் ராய் மீதான வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதுல் ராயும் அமிதாப் தாகூரும் மிரட்டியதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையே, இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் அமிதாப் தாகூர், “2020-ல், அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவரது நண்பர் பேசும் காணொலி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதை போலீஸ் அதிகாரிக்கு அனுப்பியிருந்தேன். அதற்குப் பின்னர் என்னைச் சந்திக்க லக்னோவில் உள்ள என் வீட்டுக்கு அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் வந்தனர். அப்படி வந்தவர்கள் திடீரென கூச்சல் போட்டு என்னையும் என் மனைவியையும் மிரட்டினர். அதுதொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளித்தேன். மற்றபடி எனக்கும் இந்தத் தற்கொலைச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

கட்டாய ஓய்வு

அமிதாப் தாகூர், இதற்கு முன்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தவர். 2015-ல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தன்னை மிரட்டியதாக அமிதாப் தாகூர் குற்றம்சாட்டியது பரபரப்பாகப் பேசப்பட்டது. 2028-ம் ஆண்டு வரை அமிதாப்புக்குப் பணிக்காலம் இருந்தநிலையில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த ஆண்டு மார்ச் மாதமே அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தன் மனைவியுடன் இணைந்து தகவல் உரிமைச் சட்டச் செயற்பாட்டாளராக அமிதாப் செயல்பட்டு வந்தார். உத்தர பிரதேச மாநில அரசு அலுவலகங்களில் ஊழல் நடைபெறுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் இருவரும் பல்வேறு வழக்குகளையும் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கைதான அமிதாப் தாகூர், “என்னைக் கொல்ல யோகி ஆதித்யநாத் சதி செய்கிறார். அதற்காகத்தான் நான் கைதுசெய்யப்பட்டிருக்கிறேன். காவல் நிலையத்திலேயே போலீஸார் என்னைத் தாக்கினார்கள்” என்று கூறியிருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE