கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தீவிரம்: ஆதரவுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷின் நிபந்தனைகள் 

By KU BUREAU

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி பலத்துடன் ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்தநிலையில் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பிக்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணியின் அபார வெற்றியும் பாஜகவுக்கான பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்திலும் பாஜக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வென்றுள்ளன. இதனை இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டணிக்கு நிபந்தனைகள் விதிக்கும் கட்சிகள்: இதற்கிடையே, பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளான சந்திரபாபுவும், நிதிஷ்குமாரும் சில நிபந்தனைகள் விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாநிலங்களும் பல ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை தற்போது ஆதரவு அளிப்பதற்கான நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தவிர, இரு கட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது தற்போது மக்களவையில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியே அமைய உள்ளது . இந்தச்சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த 2014, 2019 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற பாஜக, சபாநாயகர் பதவியை தனது வசமே வைத்திருந்தது.

இதுதவிர சில முக்கிய அமைச்சரவை இலாகாகளையும் கேட்டு நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE