தேர்தல் முடிவுகள் 2024: தொடர்ந்து பாஜக முன்னிலை; இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு!

By KU BUREAU

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 283; இண்டியா கூட்டணி 189 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்துள்ளது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

ஜனநாயகத் திருவிழா: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தியுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE