பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

By KU BUREAU

பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விமானி தீபக் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி நான் ‘ஏஐ459’ விமானத்தை இயக்கினேன். அந்த விமானத்தை விபத்துக்கு உள்ளாக்க பிரதமர் நரேந்திர மோடி சதி செய்தார்.

இது தீவிரவாத, தேசவிரோத செயல் ஆகும். அரசமைப்பு சாசனத்தை மீறி அவர் செயல்பட்டார். விமான விபத்து சதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டார். எனவே தற்போதைய மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் சதித் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் இருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தீபக் குமார் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அர்த்தமற்ற, பொறுப்பற்ற முறையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எந்த வகையிலும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE