ஆச்சரியங்கள் தர காத்திருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!

By காமதேனு

கோபால்

ஐந்து மாநிலத் தேர்தல் களமானது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டிக் களமாகவே பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12-ல் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20-ல் நடக்கவிருக்கிறது. மத்திய பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ம் தேதியும் ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ல் வெளியாகின்றன.

இந்த ஐந்து மாநிலங்களில் ம.பி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் ராஜஸ்தானில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியைப் பறிகொடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றன. மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக இந்த முறையும் ஆட்சியைத் தக்க வைக்க மெல்லிய வாய்ப்புகள் இருப்பதாகக் கணிப்புகள் சொல்கின்றன. இவ்விரண்டு மாநிலங்களிலும் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடிக்கிறது. அதனால் போட்டி கடுமையாக இருக்கும் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ம.பி-ல் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் ஆட்சியின் மீதான அதிருப்தி கடந்த தேர்தலைவிட இப்போது கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த குஜராத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றதற்கு நகர்ப்புறங்களில் அக்கட்சிக்கு இருந்த செல்வாக்கே முக்கியமான காரணம். இப்போது தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் அந்தக் கணக்கு செல்லுபடி ஆகாது. ம.பி-ல் கிராமங்களே அதிகம். பொதுவாக, பாஜகவுக்கு நகர்புறங்களில்தான் செல்வாக்கு. கிராமங்களில் விவசாயிகளின் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட வாழ்வாதாரச் சிக்கல்களால் அரசின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் இதே நிலைதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE