கோபால்
இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசும் அதன் தீய விளைவுகளும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன. டெல்லி அளவுக்குத் தீவிரமாக இல்லை என்றாலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு ஒரு தீவிரமான பிரச்சினையாக மக்களின் உடல்நலனை சீர்குலைக்கும் முக்கியக் காரணியாக வளர்ந்துவருகிறது. இதைக் கவனத்தில் வைத்து இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கலவையான எதிர்வினையைப் பெற்றது.
தீபாவளி அன்று பல இடங்களில் பட்டாசு தொடர்பான தீர்ப்பு மீறப்பட்டது. அதேநேரம் நீதிமன்றத் தீர்ப்பால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீபாவளி காலத்தில் ஏற்படும் காற்று மாசின் அளவு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், காற்று மாசின் பிரச்சினை தீபாவளி போன்ற பருவகால பண்டிகைகளுக்கு அப்பாற்பட்டது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசால் 65 லட்சம் பேர் இறக்கின்றனர். சாலை விபத்துகளால் இறப்பவர்களைக் காட்டிலும் இது ஐந்து மடங்கு அதிகம். உலகின் மிக அசுத்தமான காற்றைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் 20 இந்திய நகரங்கள் இருக்கின்றன.