பாஜக பாதையில் காங்கிரஸ்!

By காமதேனு

தேர்தல் அறிக்கை என்பது ஒரு கட்சியின் வெற்றி  தோல்வியை தீர்மானிக்கும் முக்கியக் காரணி. முன்பெல்லாம், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் அமர்ந்து பேசி தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நடைமுறையை நவீனமாக்கியது பாஜக!
ஆம், கடந்த தேர்தலில் இணையத்தையும் சமூக வலைதளங்களையும்  பரவலாகப்  பயன்படுத்திய  பாஜக, தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் இணையத்தைப் பயன்படுத்தியது. 

இதற்கென்று ஒரு இணையதளத்தைத் தொடங்கி அதில் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்னவாக இருக்கலாம் என்று மக்களின் யோசனைகளைக் கேட்டறிந்தது. அதன் அடிப்படையில் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதனால் பெரும்பான்மை தொகுதிகளில் வென்று ஆட்சியையும் பிடித்தது. அடுத்தடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இணையத்தைத் தாண்டி, பொதுக்கூட்டங்களின் மூலம் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை இறுதி செய்தது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக மட்டுமல்ல; எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாகத் தயாராகிவருகிறது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக செய்ததைப் போலவே மக்களின் கருத்தைக் கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கத் திட்மிடுகிறது காங்கிரஸ் கட்சி.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 150 பொதுக் கூட்டங்களை நடத்தி அவற்றின் மூலம், மக்கள் என்னென்ன தேர்தல் வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிய முடிவுசெய்திருக்கிறது காங்கிரஸ். இதுவரை இதுபோன்ற 16 பொதுக்கூட்டங்கள் புதுடெல்லி, அலிகர், பெங்களூரு, சண்டிகர், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நடத்தி முடித்திருக்கிறார்கள். காங்கிரஸின் இந்த நடைமுறைக்கு ‘ஜன் அவாஸ்’ (மக்களின் குரல்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜன் அவாஸ் கூட்டங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் கலந்து பேசி தேர்தல் அறிக்கையை இறுதி செய்யுமாம் காங்கிரஸ். இவை தவிர, இணையதளம், மின்னஞ்சல், வாட்ஸ் - அப் மூலமாகவும் வாக்காளர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE