சுஷ்மா ஸ்வராஜ் மவுனமாகிவிட்டது ஏன்?

By காமதேனு

‘மீ டூ’ (#MeToo) சர்ச்சையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பரின் பெயர் அடிபடுகிறது. அவர் மீது ஊடகத் துறையைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ஸ்ம்ருதி இரானி, மனேகா காந்தி, உமா பாரதி ஆகியோர் அக்பரைப் பற்றி நேரடியாக கருத்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் ‘மீ டூ’ இயக்கத்தை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த பெண் ஆளுமையுமான சுஷ்மா ஸ்வராஜ் தன் அமைச்சரவை சகா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தோ பொதுவாக ‘மீ டூ’ இயக்கம் குறித்தோ இதுவரை வாய் திறக்கவில்லை.

பாஜகவில் சுஷ்மா ஸ்வராஜ் அதிகாரமற்றவராக ஆக்கப்பட்டிருப்பதன் பிரதிபலிப்புதான் இந்த மவுனம் என்று பாஜக உள் விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஹரியாணாவில் பிறந்தவரான சுஷ்மா ஸ்வராஜ் இதுவரை ஏழு முறை மக்களவை எம்பி ஆகவும் சில மாதங்கள் டெல்லி முதல்வராகவும் இருந்தவர். 2014-ல் மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியில் வென்று எம்பி ஆனார். 2004-2009 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர். ”இத்தாலியரான சோனியா காந்தி இந்தியப் பிரதமர் பதவியை ஏற்றால் நான் மொட்டை அடித்துக்கொள்வேன்” என்று அதிரடி கிளப்பியவர். அதே நேரம் அவரது நெடிய அரசியல் அனுபவமும் பல்வேறு துறைகளில் அவருக்கு இருந்த மேதைமையும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பல முறை கைகொடுத்திருக்கிறது. இதனால் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளில் அவருக்கும் செல்வாக்கு இருந்தது.

ஆனால் 2014-லிருந்து காட்சிகள் மாறின. மோடி அமைச்சரவையில் எல்.கே.அத்வானியின் ஆதரவாளராக கருதப்படும் சுஷ்மா ஸ்வராஜுக்கு நான்கு முக்கிய அமைச்சரவைகளில் ஒன்றான வெளியுறவுத் துறை கொடுக்கப்பட்டது. அவரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்தார். இருந்தாலும் இதைத் தாண்டி வெளியுறவுத் துறையில் அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அந்நிய நாடுகளுடனான உறவுகளில் பிரதமர் அலுவலகத்துக்கும் பெரும் செல்வாக்கு இருப்பதால் அவரால் ஒரு எல்லைக்கு மேல் செயல்பட முடியவில்லை.

மறுபுறம் கட்சி தொடர்பான எந்த முடிவுகளிலும் சுஷ்மாவின் கருத்து கேட்கப்படுவதில்லை. கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் அவர் முன்னிறுத்தப்படுவதில்லை. மேலும், 2016-ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு சுஷ்மாவின் உடல் ஆரோக்கியமும் சரிவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE